அனுப்பர்பாளையம்
திருப்பூர் உழவர் சந்தையில் அமைச்சர் மு.ெப.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அமைச்சர் ஆய்வு
திருப்பூர் பல்லடம ரோட்டில் தெற்கு உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. அங்கு 450 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் தினமும் இந்த சந்தையில் 100 டன் அளவிலான காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. தினமும் 5 ஆயிரம் பொதுமக்கள் காய்கறி வாங்கி செல்கின்றனர். ஆனால் சந்தையில் காய்கறி எடை போடுவதில் குளறுபடி, கடை அமைப்பவர்களுக்கு டோக்கன் வழங்குவதில் பாரபட்சம், நிர்வாக அலுவலர் மற்றும் நிர்வாக செயல் அலுவலர்கள் வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே பணிக்கு வருவது உள்ளிட்ட புகார்கள் எழுந்தது.
மேலும் இரவில் சந்தைக்கு வரும் பெண்கள் தங்குவதற்கு இடம் இல்லாதது, சந்தைக்குள் இடநெருக்கடி உள்ளிட்ட கோரிக்கைகளும் இருந்தது. இந்த நிலையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலெக்டர் வினீத் தலைமையில், க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சந்தை தொடர்பாக எழுந்த புகார் மற்றும் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விபரங்களை அமைச்சர் கேட்டறிந்தார்.
விவசாயிகளிடம் குறை கேட்பு
பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து புகார் எழாத வகையில் பணியாற்றுமாறு ஊழியர்களை அமைச்சர் எச்சரித்தார். பின்னர் சந்தை அலுவலகத்திற்கு சென்ற அமைச்சர் பதிவேடுகள், அங்கு வைக்கப்பட்டுள்ள காய்கறி விலை பட்டியல் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகளை பார்வையிட்டு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை உழவர் சந்தையில் வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியம், 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், தி.மு.க. திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜ், உதவி கமிஷனர் செல்வநாயகம், சுகாதார அலுவலர்கள் முருகன், ராமச்சந்திரன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
----