நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

தமிழக கவர்னரை மத்திய அரசு தூண்டி விடுகிறதா? என நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.

Update: 2023-05-07 21:18 GMT

நாகர்கோவில், 

தமிழக கவர்னரை மத்திய அரசு தூண்டி விடுகிறதா? என நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.

பொதுக்கூட்டம்

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நாகர்கோவில் வடசேரி வஞ்சியாதித்தன் புதுத்தெருவில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்த் வரவேற்று பேசினார். நிர்வாகிகள் சேக் மீரான், கலாராணி, அகஸ்டினா கோகிலவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. அரசின் சாதனைகளை 2 ஆண்டு கால சாதனை என்று சொல்கிறோம். ஆனால் இது 2 ஆண்டு கால சாதனை இல்லை. ஏன் எனில் நாங்கள் பதவி ஏற்ற பிறகு பதவி பற்றி தெரியவே 6 மாதம் ஆகிவிட்டது. கொரோனா தொற்று 6 மாதங்கள் இருந்தது. இப்படியே ஒரு ஆண்டு போய்விட்டது. மீதம் உள்ள ஒரு ஆண்டில் மு.க.ஸ்டாலின் செய்ததை தான் 2 ஆண்டு கால சாதனை என்று சொல்கிறோம்.

கவர்னர் பொய் கூறுகிறார்

சட்டசபையில் படிக்க வேண்டிய உரையை கவர்னரிடம் கொடுத்துவிட்டு வந்தோம். அதை நாங்கள் தான் எழுதிக் கொடுத்தோம். அவர் கூறியது போல திருத்தங்கள் செய்து தான் கொடுத்தோம். அதை தான் சட்டசபையில் கவர்னர் படித்தார். அப்போது அவர் வார்த்தையை விட்டு விட்டு படித்ததை பார்த்தேன். அதுதொடர்பாக முதல்-அமைச்சர் கேள்வி கேட்டார். ஆனால் அவர் தேசிய கீதம் முடியும் வரை இருக்காமல் பாதியிலேயே சென்றுவிட்டார்.

ஆன்லைன் ரம்மியால் 45 பேர் இறந்தார்கள். எனவே அதை ரத்து செய்துள்ளோம். இதுபோல் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். இதை எல்லாம் கவர்னர் சொல்லாமல் அவர் இஷ்டத்துக்கு பேட்டி கொடுக்கிறார். தமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் இருப்பதாக கூறி இருக்கிறார். மதுரையில் பெரிய நூலகம் கட்டுகிறோம். அந்த நூலகத்தில் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகம் மட்டும் இருப்பதாகவும், இந்தி புத்தகம் இல்லை என்றும் கவர்னர் சொல்கிறார். அந்த நூலகம் இன்னும் கட்டி முடிக்கவே இல்லை. அடுத்த மாதம் தான் திறக்கப்பட இருக்கிறது. ஆனால் அதற்குள் புத்தகம் இல்லை என்று கூறுகிறார். கவர்னர் பொய்களை கூறி வருகிறார்.

முதன்மை மாநிலம்

இந்தியாவில் எல்லாவற்றிலும் முதன்மை மாநிலமாக திகழ்வது தமிழ்நாடு. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்ததில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் எதிர்கட்சிகாரர்கள் கூட பேச முடியாததை கவர்னர் பேசுகிறார். தமிழகத்தில் பல்கலைக்கழக மசோதாக்கள் கிடப்பில் உள்ளன. ஆனால் எந்த மசோதாக்களும் கிடப்பில் இல்லை என்று கவர்னர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் கவர்னர் பொய் சொல்லலாமா?

தமிழகத்தில் திராவிட மாடல் அரசே இல்லை என்று கவர்னர் கூறினார். அது அரசியல் வாசகம் என்றும் சொல்கிறார். அவருக்கு திராவிட அரசு என்னவென்றே தெரியாது. திராவிடம் என்ற சொல் தான் தமிழகத்தில் இயக்கத்தை உருவாக்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு திராவிட மாடல் செத்து போனதாக கூறுகிறார். செத்து போனது திராவிடமா? அல்லது நமது உணர்வா? இப்படிப்பட்ட கவர்னரை வைத்துக்கொண்டு இருக்கிறோம். எதிர்கட்சிகளை கூட சமாளித்து விடுகிறோம். ஆனால் கவர்னர் எதிர்கட்சி தலைவர் போல செயல்படுகிறார். இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறதா? அல்லது தூண்டி விடுகிறதா? என்று தெரியவில்லை. எந்த கவர்னரும் இப்படி கிடையாது.

ஆறுகள் சரி செய்யப்படும்

நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் தட்டுப்பாடு என்று கூறினார்கள். உடனே பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்க கூறினேன். குமரி மாவட்டத்தில் ஆறுகள் கெட்டுப்போய் உள்ளது. அதையெல்லாம் சரி செய்யாவிட்டால் நாஞ்சில் நாட்டை காப்பாற்ற முடியாது என்று நான் முதல்-அமைச்சரிடம் சொன்னேன்.

மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஆறுகள் அனைத்தும் சரிசெய்யப்படும். ஏ.வி.எம்.கால்வாயை குளச்சல் முதல் மண்டைக்காடு வரை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். தூண்டில் வளைவு போட கல் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர். கல் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். பெரிய பெரிய கல் எடுத்துக்கொண்டு போவதால் சாலைகளில் பழுது ஏற்படுகிறது. பெரிய வாகனங்களில் கல் கொண்டு சென்றால் நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கூறி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

80 சதவீதம் நிறைவேற்றம்

முன்னதாக கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. பேசியபோது, "நாட்டின் சிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். அவரது ஆட்சியில் மாதம்தோறும் மழை பெய்து தமிழகம் செழிப்பாக உள்ளது. மக்களை தேடி மருத்துவம், காலை சிற்றுண்டி, இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த முடிகிறது என்று டெல்லி வந்தபோது ஜப்பான் பிரதமரே கேட்டுள்ளார். இந்த திட்டங்கள் இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லை. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 5 ஆயிரம் கோவில்கள் புனரமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும் என்பதை மு.க.ஸ்டாலின் தான் கொண்டு வந்தார். மத்திய அரசால் வங்கியில் வாங்கப்பட்ட 5 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் திருப்பி கொடுக்க முடியவில்லை. நாட்டை காக்கும் பொறுப்பும், தலைமை வகிக்கும் திறனும் மு.க.ஸ்டாலினுக்கு மட்டும் தான் உள்ளது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்