புத்தகசாலை அமைக்கும் திட்டத்தை உயிர்ப்பிக்க வேண்டும்பதிப்பாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்
சென்னையில் புத்தகசாலை அமைக்கும் திட்டத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்று வேலூரில் நடந்த புத்தக திருவிழாவில் பதிப்பாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னையில் புத்தகசாலை அமைக்கும் திட்டத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்று வேலூரில் நடந்த புத்தக திருவிழாவில் பதிப்பாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்தார்.
புத்தக திருவிழா
வேலூர் நேதாஜி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை சார்பில் புத்தக திருவிழா நடக்கிறது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். பின்னர் ஒவ்வொரு அரங்குகளாக சென்று பார்வையிட்டு புத்தகங்களை வாங்கினார்.
அங்கு சிறைத்துறை சார்பில் கூண்டுக்குள் வானம் என்ற அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்க விரும்புபவர்கள் புத்தகங்கள் வாங்கி அதில் உள்ள பெட்டியில் போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அமைச்சர் துரைமுருகன் பார்வையிட்டு திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
நாட்டுப்பற்று
புத்தகங்களை படிப்பதால் மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப்பற்று வருகிறது. வாசிப்பு பழக்கம் மாணவர்களை ஒழுக்கம் உடையவர்களாக மாற்றுகிறது. மாணவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை, ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். தொடர்ந்து புத்தங்களை படித்தவர்கள் உலகில் தலைவர்களாக மாறி உள்ளனர்.
புத்தகம் படிக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டால் அதை நிறுத்த முடியாது. எனது நூலகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளது. புத்தகம் படிப்பதால் உலக அறிவு வளரும். உலகில் நல்லது, கெட்டது எது என்பதை கண்டறிய முடியும். வாழ்க்கைக்கு உறுதுணையாக வருவது புத்தகம்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியின் போது சென்னை எத்திராஜ் கல்லூரி அருகே புத்தக பத்திப்பாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் புத்தகசாலை அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது பதிப்பாளர்களிடையே ஒற்றுமை இல்லாததால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அந்த திட்டத்தை உயிர்ப்பித்து புத்தக பதிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
11 நாட்கள்
இந்த புத்தக திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு கல்வி, பொருளாதாரம், அரசியல், வரலாறு உள்ளிட்ட சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தக கண்காட்சி வருகிற 6-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சியில் வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி. செந்தாமரைகண்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி, ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், குடியாத்தம் எம்.எல்.ஏ. அமுலுவிஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.