மோட்டார் சைக்கிள்களில் சென்று அமைச்சர், கலெக்டர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் 2,370 ஏக்கர் வாழைகள் சேதமடைந்தன. இதனை மோட்டார் சைக்கிள்களில் சென்று அமைச்சர், கலெக்டர் ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

Update: 2023-06-06 18:45 GMT

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழையால் ராமாபுரம், வெள்ளக்கரை, கீரப்பாளையம், வழிசோதனைப்பாளையம், அன்னவல்லி, குள்ளஞ்சாவடி வழுதலம்பட்டு, புலியூர் மேற்கு, கிழக்கு, கோரணப்பட்டு, மதனகோபாலபுரம் மற்றும் கட்டியங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள் முறிந்தும், சாய்ந்தும் சேதமடைந்தன.

இதை பார்த்த விவசாயிகள் கண்ணீர் விட்டனர். அவர்கள் பாதிக்கப்பட்ட தங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அமைச்சர், கலெக்டர் ஆய்வு

இதற்கிடையில் நேற்று வாழை மரங்கள் விழுந்த பகுதிகளான கடலூர் கீரப்பாளையம், வெள்ளக்கரை, கொடுக்கன்பாளையம், ஒதியடிக்குப்பம், வழிசோதனைப்பாளையம் ஆகிய பகுதிகளை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவர்கள் கீரப்பாளையத்துக்கு சென்று சேதமடைந்த வாழைகளை பார்வையிட்ட போது, அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்ட மற்ற வாழை வயல்களையும் பார்வையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதை ஏற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் பின்னால் அமர்ந்து, பாதிக்கப்பட்ட வயலுக்கு சென்று சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமும் சென்றார்.

2,370 ஏக்கர் வாழைகள் சேதம்

இதனை தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் 2,370 ஏக்கர் (948 ஹெக்டேர்) வாழைகள் சேதமடைந்து உள்ளன. இதனால் 1,109 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சேதமடைந்த பயிர்களை தோட்டக்கலை துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் இணைந்து கணக்கெடுத்து வருகின்றனர். இந்த பாதிப்பு விவரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்