ரூ.238 கோடியில் 2¾ லட்சம் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு கட்டும் பணி- அமைச்சர் சக்கரபாணி
தமிழகத்தில் ரூ.238 கோடியில் 2¾ லட்சம் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
தமிழகத்தில் ரூ.238 கோடியில் 2¾ லட்சம் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான பணிகள் நடந்து வருவதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
புதிய அலுவலகம் திறப்பு
திருவாரூர் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் ரூ.6 கோடியே 84 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக புதிய கட்டிடத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இதையொட்டி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திருவாரூரில் உள்ள புதிய அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி, அலுவலகத்தை பார்வையிட்டு, வளாக பகுதியில் மரக்கன்றுகளை நட்டார். அப்போது மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், நாகை செல்வராஜ் எம்.பி., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன், திருத்துறைப்பூண்டி மாரிமுத்து எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்திரா, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
அமைச்சர் ஆய்வு
இதனை தொடர்ந்து திருவாரூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நெல் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் ரூ.4 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் 7,250 டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு கட்டப்படுவதை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர், விவசாயிகளின் நலன் கருதி சன்ன ரக நெல்லுக்கான ஆதார விலை குவிண்டால் ரூ.1,940 என்பதனை ரூ.2160 ஆக உயர்த்தி உள்ளார். அதேபோல் பொது ரகத்திற்கு ரூ.1,915-ல் இருந்து ரூ.2115 ஆக உயர்த்தி உள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 86 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நேற்று வரை 1 லட்சத்து 80 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
சேமிப்பு கிடங்கு
நேரடி நெல் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளில் வைக்கக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் ரூ.238 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 லட்சத்து 86 ஆயிரத்து 450 டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகள் அடுத்த மாதம் (டிசம்பர்) நிறைவு பெறும். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 286 நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகள், 21 நவீன அரிசி ஆலைகளை சீரமைப்பதற்காக ரூ.90 கோடியை நபார்டு வங்கி மூலம் பெறுவதற்கு முதல்-அமைச்சர் அனுமதி தந்துள்ளார்.
11 லட்சம் டன்
தமிழகத்தில் மொத்தம் 11 லட்சம் டன் நெல்லினை சேமித்து வைப்பதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
அப்போது நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.