சிங்கப்பூர் துறைமுகத்தை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்

தமிழ்நாட்டின் சிறு துறைமுகங்களை மேம்படுத்த சிங்கப்பூர் துறைமுகத்தை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-09-29 00:12 GMT

சென்னை,

தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சிங்கப்பூர் துறைமுக சரக்கு பெட்டக முனையத்தை நேரில் பார்வையிட்டார்.

அப்போது அந்த துறைமுகத்தின் சிறப்புகள் பற்றி சிங்கப்பூர் பிரதிநிதிகள் அமைச்சருக்கு எடுத்துக் கூறினார்.

இந்த ஆண்டு சரக்குகளை கையாள்வதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதிலும் சிங்கப்பூர் துறைமுகம் மட்டும் 37 மில்லியன் சரக்கு பெட்டகங்களை வெற்றிகரமாக கையாண்டதாகவும், நவீன தொழில்நுட்பங்களே இந்த சாதனைக்கு காரணம் என்றும் அவர்கள் விளக்கி கூறினா்.

துறைமுகங்களை மேம்படுத்த ஆலோசனை

தமிழ்நாட்டில் ஆயிரத்து 76 கிலோ மீட்டர் நீளமுடைய கடற்கரை உள்ளதாக சிங்கப்பூர் துறைமுக அலுவலர்களிடம் தெரிவித்த அமைச்சர் எ.வ.வேலு, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களையோ அல்லது இதர சிறு துறைமுகங்களில் ஏதேனும் பொருத்தமான துறைமுகங்களையோ மேம்படுத்துவது தொடர்பாக விவாதித்தார்.

தமிழக கடற்கரையின் திறனை பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டு வரவிருக்கும் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

தமிழ்நாட்டில் சிறு துறைமுகங்களை மேம்படுத்த அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடினார்.

அமைச்சர் உறுதி

துறைமுகங்கள் மற்றும் கடல்சார் திட்டங்களுக்கு முதலீடுகளை எளிதாக்குவதற்கு, அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அமைச்சர் உறுதி அளித்தார். தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்த, அமைச்சர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு சிங்கப்பூர் பிரதிநிதிகள் உறுதுணையாக இருப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

அமைச்சருடன் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரக ஆணையத்தின் முதன்மை செயலாளர் பிரபாகர் ஆகியோரும் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்