குறுகலான சாலைகளை அகலப்படுத்துவது குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

கும்பகோணத்தில் குறுகலான சாலைகளை அகலப்படுத்துவது குறித்து அமைச்சர் எ.வ. வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-04-22 21:58 GMT

கும்பகோணம்:

கும்பகோணத்தில் குறுகலான சாலைகளை அகலப்படுத்துவது குறித்து அமைச்சர் எ.வ. வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகர பகுதியில் உள்ள குறுகலான சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என சட்டமன்றத்தில் கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று கும்பகோணத்திற்கு வந்து கும்பகோணம் பழைய பாலக்கரை ஆற்று பாலம் மற்றும் அதனை ஒட்டிய சாலைகளை பார்வையிட்டு சாலையை அகலப்படுத்துவதற்காக ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை

மகாமக விழா தொடர்புடைய கும்பகோணம் மாநகருக்கு வரும் மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கும்பகோணத்தில்குறுகிய சாலைகளாக உள்ளதால் அந்த சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என சட்டமன்றத்தில் கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

இதனால் கும்கோணம் பழைய பாலக்கரை ஆற்று பாலத்தை ஒட்டிய சாலைகளை இன்று (அதாவது நேற்று) நேரில் பார்வையிட்டு சாலைகளை அகலப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்பட்டது.

ஒப்புதல் பெற வேண்டும்

இந்த சாலையை விரிவுப்படுத்துவது தொடர்பாக நீர் மேலாண்மை துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம் என தெரியவந்துள்ளது. இதற்காக நீர் மேலாண்மை துறையினரிடம் தடையில்லாச்சான்று பெற வேண்டியுள்ளது.

கும்பகோணம் பழைய பாலக்கரையில் இருந்து சுமார் 700 மீட்டர் நீளத்திற்கு காவிரி ஆற்றங்கரையோரம் உள்ள சாலை விரிவுப்படுத்த வேண்டியுள்ளது. நீர்மேலாண்மைத் துறையினரின் தடையில்லாச்சான்று பெறப்பட்ட பின்பு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

சாலை விரிவாக்க பணிகள்

கூடுமானவரை இந்த நிதியாண்டிலேயே சாலை விரிவாக்க பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ. நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்