சிமெண்டு சாலை அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அமைச்சர் ஆய்வு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சுற்றியுள்ள மாடவீதியில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2021-22 ன் கீழ் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக மாடவீதியில் பே கோபுரத் தெரு சந்திப்பு முதல் காந்தி சிலை வரையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியினை இன்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணி விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், இந்த பணியின் மொத்த அளவு 1080 மீட்டர். அதில் தற்போது 650 மீட்டர் அளவிற்கு திருவண்ணாமலை நகராட்சி மூலமாக பாதாள சாக்கடை மற்றும் மின்சார வாரியம் சார்பாக நிலத்தடி வடம் பதிக்கப்பட்டு 2-ம் கட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
மேலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அம்மணி அம்மன் கோபுர தெருவிலிருந்து காந்தி சிலை வரை 350 மீட்டர் பணிகள் தொடங்கப்பட வேண்டும்.
பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல்
தற்போது தொடங்கப்படவுள்ள பணியியை செப்டம்பர் மாதத்திற்குள் விரைந்து முடித்திட வேண்டும். அதுமட்டுமல்லாமல் பொது மக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் காவல் துறையின் மூலமாக சாலை போக்குவரத்துக்களை உடனுக்குடன் சரி செய்து பணியாற்ற வேண்டும் என்றார்.
ஆய்வின் போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் சந்திரசேகரன், கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்டப்பொறியாளர் ராஜ்குமார்,
தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் தட்சணாமூர்த்தி, தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.