ஆறுமுகநேரிஅரசு மகளிர் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு
ஆறுமுகநேரிஅரசு மகளிர் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆசிரியைகள், மாணவிகளிடம் அமைச்சர் குறைகேட்டு, நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தார்.
அமைச்சர் திடீர் வருகை
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திருச்செந்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடைக்கலாபுரம் சாலைஓரத்தில் இருக்கும் ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு திடீரென சென்று ஆய்வு நடத்தினார். இதை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி வகுப்பறையில் இருந்து வேகமாக வந்து அமைச்சரை வரவேற்றார்.
மாணவிகள் உற்சாகம்
ஆசிரியர்கள் வழக்கம்போல் வகுப்பறையில் பாடம் நடத்துமாறு அறிவுறுத்திய அமைச்சர் ஒவ்வொரு வகுப்புக்கும் சென்றார். அமைச்சரை பார்த்தவுடன் மாணவிகள் உற்சாகமாக கைதட்டி வரவேற்றனர்.
வகுப்பறைகளுக்குள் சென்ற அமைச்சர் நாற்காலி, பெஞ்சுகள் உறுதியாக இருக்கிறதா? என அமர்ந்து பார்த்தார். இதுகுறித்து மாணவிகளிடமும் கருத்து கேட்டார்.
மேலும், மாணவிகளிடம் பாடம் நடத்தும் முறையையும், பள்ளிக்கூடத்திற்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிந்தார். பள்ளி கட்டிடங்களில் மின் இணைப்பு முறையாக செய்யப்பட்டுள்ளதா? சுகாதாரமான குடிநீர் கிடைக்கிறதா? கழிப்பறை சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா? என மாணவிகளிடம் கேட்டறிந்தார்.
ஆசிரியைகளிடம் குறைகேட்பு
பின்னர் ஆசிரியர்களை அழைத்த அமைச்சர், அவர்களிடம் பாடம் நடத்துகிற முறையில் ஏதாவது நெருக்கடி இருக்கிறதா? பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய விரும்புகிறீர்களா? உங்களுக்கு ஏதாவது குறை உள்ளதா? என கேட்டார்.
அப்போது, அமைச்சர் கூறுகையில், பள்ளிக்கு மேலும் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தருமாறு ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர். கூடுதலாக புதிய வகுப்பறைகள் கட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அமைச்சர் உறுதி
இக்கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று, இந்த பள்ளிக்கூடத்துக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும், என்றார். மேலும், பள்ளிக்கூடத்தில் சுகாதாரத்தை பராமரிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவிகளுக்கு தரமான கல்வி கற்றுத்தர வேண்டும், என தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளை அமைச்சர் அறிவுறுத்தினார். அமைச்சருடன் மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்செல்வியும் வந்திருந்தார். ஆய்வை முடித்து ெகாண்ட அமைச்சர் திருச்செந்தூருக்கு புறப்பட்டு ெசன்றார். அமைச்சர் திடீரென வந்து ஆய்வு நடத்தி சென்றது பள்ளிக்கூடத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.