கீழ்பவானி வாய்க்காலில் புனரமைப்பு மேற்கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம்- அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்தது

கீழ்பவானி வாய்க்காலில் புனரமைப்பு மேற்கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்தது.

Update: 2023-03-13 20:41 GMT

ஈரோடு

கீழ்பவானி வாய்க்காலில் புனரமைப்பு மேற்கொள்வது குறித்து ஆலோசனை கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்தது.

ஆலோசனை கூட்டம்

கீழ்பவானி திட்டத்தின் கீழ்வாய்க்கால் பகுதிகள் புனரமைப்பு மேற்கொள்வது குறித்து விவசாயிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைப்பது தொடர்பாக விவசாயிகளிடம் மாறுபட்ட கருத்து உள்ளது. அதற்காக விவசாயிகளிடம் பேசி எந்த இடத்தில் தேவை எந்த இடத்தில் தேவையில்லை என்பது குறித்த விவரங்களை வழங்க வேண்டும் என்பது குறித்து பட்டியலாக வழங்க கேட்டுள்ளோம். 4 நாளில் பட்டியல் தயார் செய்து தருவதாக கூறி உள்ளனர். 2 தரப்பினரிடம் இருந்து சுமூகமான தீர்வு ஏற்பட்டு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. விவசாயிகள், அவர்களுக்கு உள்ள பிரச்சினைகளை தெரிவித்துள்ளனர். அதேநேரம், என்ன நடவடிக்கை எடுத்தால், பிரச்சினையில் இருந்து தீர்வு பெறலாம் என கூறி உள்ளோம். வாய்க்காலில் உள்ள மரங்களை பாதுகாப்பதில் அரசு கவனமாக செயல்படும்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

தேர்தல்

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 'கீழ்பவானி வாய்க்கால் மூலம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஒரு மதகு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது மற்றொரு மதகில் பாசனம் நடக்காது. வாய்க்காலில் கான்கிரீட் சுவர், தளம் அமைத்துவிட்டால், கசிவு நீர் மூலம் நிலத்தடி நீர் மட்டம், கிணற்று பாசனம் பாதிக்கும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும். அதற்கு முன்னதாக கீழ்பவானி பாசன வாய்க்காலில் அனைத்து நிலைகளிலும் முறையாக தேர்தல் நடத்தி, பாசன சபை ஏற்படுத்தி, அவர்கள் கருத்தை பெற்று முடிவு எடுக்க வேண்டும்' என்றனர். கூட்டத்தில் கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்