வாய்க்கால் உடைப்பு சீரமைப்பு: அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

வாய்க்கால் உடைப்பு சீரமைப்பு: அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Update: 2022-12-24 20:44 GMT

பெருந்துறை

பெருந்துறையை அடுத்த திருவாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட பாலப்பாளையம் கிராமம் வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 10-ந் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் அமைச்சர் சு.முத்துசாமி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடைப்பு ஏற்பட்ட வாய்க்காலை நேரில் பார்வையிட்டதுடன், உடைப்பை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 18-ந் தேதி வாய்க்கால் உடைப்பு சீரமைக்கப்பட்டது. மேலும் அன்றைய தினமே வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மதியம் 3 மணி அளவில் பாலப்பாளையத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு வந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அமைச்சர் முத்துசாமி, பெருந்துறை அருகே வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு சென்றார். பின்னர் அந்த உடைப்பு ஏற்பட்ட பகுதி வழியாக தண்ணீர் சென்றதை பார்த்து, அங்கிருந்த விவசாயிகளிடம் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். மேலும் பணியை விரைந்து முடித்த பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் அமைச்சர் சு.முத்துசாமி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. வீ.சி.சந்திரகுமார், ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம், பெருந்துறை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.சாமி, திருவாச்சி ஊராட்சி தலைவர் சோளிபிரகாஷ், ஊராட்சி தி.மு.க. செயலாளர் எஸ்.என்.ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்