வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றும் போலி ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை; அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரிக்கை

வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி ஏமாற்றும் போலி ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-12-06 20:57 GMT

பவானிசாகர்

வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி ஏமாற்றும் போலி ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் இலங்கை தமிழர்களுக்காக தலா 290 சதுர அடி பரப்பளவில் மொத்தம் 400 குடும்பங்களுக்கு 20 கோடி ரூபாய் செலவில் 400 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வீடுகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குடியிருப்புகளின் கட்டுமானம் குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டு அறிந்தார்.

3500 வீடுகள்

இதைத்தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இலங்கை மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக 3,017 கோடி ரூபாய் செலவில் 7 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் 3500 வீடுகள் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

வெளிநாட்டில் வேலைக்காக செல்லும் தொழிலாளர்களுக்காக, ஒவ்வொரு கலெக்டர் அலுவலகத்திலும் பல்வேறு நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விளக்க குறிப்பு உள்ளது. அதை அறிந்து கொண்டு வெளிநாடு செல்ல வேண்டும்.

500 செவிலியர்களுக்கு பயிற்சி

தமிழக அரசு பங்களிப்புடன் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் பாதுகாப்பான முறையில் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. எனவே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறும் போலி ஏஜெண்டுகளை நம்பி ஏமாறாமல் அரசு அறிவித்துள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் செல்லலாம். இந்த நிறுவனம் மூலம் 500 செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இங்கிலாந்துக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போலி ஏஜெண்டுகள்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றும் போலி ஏஜெண்டுகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2 போலி ஏஜெண்டுகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் ஆய்வு பணி மேற்கொண்டபோது இலங்கை தமிழர் முகாம் பொதுமக்கள் சார்பில் புதிய வீடு கட்டும் கண்காணிப்பு குழு தலைவர் அன்ரனி ரெஜினோல்ட் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி துறை கூடுதல் கலெக்டர் மதுபாலன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்