பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு அவசியம் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக மாணவர்களுக்கு அவசர உதவி எண்ணான 1098, மாணவர்களுக்கான 14417 என்ற எண்களை பள்ளி அளவில் விளம்பரப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கஞ்சா விற்பனை
திருப்பூர் மாநகரில் கடந்த 8 மாதங்களில் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 53 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 233 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.23 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 10 பேரின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதுபோல் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 575 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.14 லட்சத்து 92 ஆயிரம் ஆகும். 530 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 13 பேரின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் கடந்த 8 மாதங்களில், 172 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 216 பேர் கைது செய்யப்பட்டனர். 186 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.18 லட்சத்து 63 ஆயிரம் ஆகும். 73 பேரின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. 370 புகையிலை பொருட்கள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 390 கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 ஆயிரத்து 660 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.46 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். 432 பேரின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு
போதைபோதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு அவசியம்ப்பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி, கல்லூரி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் அவசியம் வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட சமூக நல அதிகாரி அம்பிகா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சவுமியா (பல்லடம்), தேன்மொழிவேல் (உடுமலை), தனராசு (தாராபுரம்), பார்த்தீபன் (காங்கயம்), முத்துக்குமரன் (அவினாசி), கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஆய்வாளர் பிரகாஷ், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், அணுரேகா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.