தியாகதுருகம் அருகே மினிலாரி-கார் நேருக்கு நேர் மோதல்; 21 பேர் படுகாயம் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய போது சம்பவம்
தியாகதுருகம் அருகே அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய போது மினிலாரி-கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 21 பேர் படுகாயமடைந்தனர்.
கண்டாச்சிமங்கலம்,
அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
கள்ளக்குறிச்சியில் நேற்று முன்தினம் இரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தியாகதுருகம் அருகே உள்ள வடதொரசலூர் கிராமத்தை சேர்ந்த 18 பெண்கள் உள்பட 23 பேர் மினிலாரியில் சென்றனர். பின்னர் கூட்டம் முடிந்ததும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மினிலாரியை ரத்தினம் (வயது 56) என்பவர் ஓட்டினார். தியாகதுருகம் அருகே கரீம்ஷா தக்கா அருகில் வந்தபோது எதிரே வந்த காரும், மினிலாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
21 பேர் படுகாயம்
இந்த விபத்தில் மினிலாரியில் வந்த டிரைவர் ரத்தினம், நாராயணன், சசிகுமார், பச்சையம்மாள், வசந்தா உள்ளிட்ட 18 பேர் மற்றும் காரில் வந்த திருக்கோவிலூர் அருகே மரூர் புதூரை சேர்ந்த அன்பழகன் மகன் திருமலைச்சாமி(28), கனகராஜ் மகன் பிரவீன்குமார்(27), விஜயராஜ் மகன் வினோத்குமார்(26) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருமலைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் மினிலாரி டிரைவர் ரத்தினம் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரபரப்பு
இதற்கிடையே விபத்து பற்றி அறிந்து வந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமரகுரு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பிரபு, அழகுவேல் பாபு, நகர செயலாளர் பாபு ஆகியோர் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். அ.தி.மு.க. பொதுக் கூட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய 21 பேர் விபத்தில் சிக்கி காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.