கனிமவள கண்காணிப்பு குழு கூட்டம்
அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் கனிமவள கண்காணிப்பு குழு கூட்டம் தாசில்தார் தலைமையில் நடந்தது/
அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட கந்தனேரி பாலாற்றில் அரசு அனுமதியுடன் மணல் குவாரி செயல்பட்டு வருகின்றது. இதனால் பொதுமக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா? என்பது குறித்து வட்ட அளவிலான கனிமவள கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு அணைக்கட்டு தாசில்தார் வேண்டா தலைமை தாங்கினார். பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், மண்டல துணை தாசில்தார் பொன்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீர்வளத்துறை உதவி பொறியாளர் சுரேஷ்குமார், தீபாவாணி ஆகியோர் வரவேற்றனர்.
அப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்களிடம் மணல் குவாரி குறித்து பொதுமக்கள் ஏதாவது புகார் கொடுத்துள்ளார்கள் என்று அலுவலர்களிடம் தாசில்தார் கேட்டறிந்தார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் கந்தனேரி பாலாற்றில் இருந்து மணல் எடுத்துச் செல்லும் வாகனங்கள் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ள சாலையில் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அந்த வழியில் மணல் எடுத்துச் செல்வதை தடுக்க வேண்டும் என்றனர்.
கூட்டத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் பேசுகையில், டிப்பர் லாரிக்கு மட்டுமே மணல் எடுத்துச்செல்ல ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் 10 சதவீத மாட்டு வண்டிகளுக்கு மணல் அல்ல அனுமதி வழங்கியும், மாட்டு வண்டி உரிமையாளர்கள் யாரும் எங்களிடம் இதுகுறித்து எந்த விதமான மனுக்களும் கொடுக்கவில்லை. எனவே, தாராளமாக மாட்டு வண்டியில் மணல் எடுத்து செல்லலாம்' என்றனர். முடிவில் தலைமையிடத்து துணை தாசில்தார் குமார் நன்றி கூறினார்.