குடும்ப பிரச்சினையில் நூற்பாலை ஊழியர் தற்கொலை

அய்யலூர் அருகே குடும்ப பிரச்சினையில் நூற்பாலை ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-06-22 15:42 GMT

அய்யலூர் அருகே உள்ள செக்கனத்துப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 33). இவர் வடமதுரை அருகே உள்ள தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி தீபா (26) என்ற மனைவியும், மதுஸ்ரீ (3) என்ற மகளும், பிரவீன் என்ற மகனும் உள்ளனர். கண்ணன் தனது பெற்றோருடன் கூட்டுக்குடும்பாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் கண்ணனின் மனைவி தீபா தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று தனது கணவரை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனால் கண்ணன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வடமதுரை ஆண்டிமாநகரில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து, மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். இருப்பினும் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கண்ணன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி, இன்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது கண்ணன் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்