பல்லடம் அருகே கழிவு பஞ்சு அரைக்கும் மில்லால் பாதிப்பு ஏற்படுவதாகவும், குடியிருப்பு பகுதியில் உள்ள மில்லை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
கழிவு பஞ்சு அரைக்கும் மில்
திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமை தாங்கினார். துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அம்பாயிரநாதன் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
பல்லடம் இச்சிப்பட்டி சிங்கப்பூர் நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்கள் குடியிருப்பு பகுதியில் எந்திரங்களை அமைத்து பனியன் கழிவை அரைக்கும் மில் செயல்பட்டு வருகிறது. அதில் இருந்து வெளியேறும் கழிவு பஞ்சு காற்றில் பறக்கிறது. அந்த காற்றை சுவாசிக்கும் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் அனைவருக்கும் மூச்சுத்திணறல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகிறது. இதுகுறித்து அந்த மில் நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இந்த பிரச்சினை தொடர்பாக இச்சிப்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தலைவரிடம் மனு கொடுத்தோம். தலைவர், சம்பந்தப்பட்ட மில்லை ஆய்வு செய்து, குடியிருப்பு பகுதியில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ஆனால் மில் நிர்வாகம் வேறு இடத்துக்கு மாற்றாமல் இருப்பதால் மக்கள் தினமும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். உடனடியாக இந்த மில்லை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
பா.ஜனதா கட்சியினர் அளித்த மனுவில், 'பல்லடம் வடுகபாளையம்-கொசவம்பாளையம் ரோட்டில் முல்லை நகர் குடியிருப்பு பகுதி உள்ளது. அந்த பகுதியில் பிரார்த்னை கூடம் உள்ளது. குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, கல்யாண மண்டபம், கோவில்கள் உள்ள பகுதியில் பிரார்த்தனை என்ற பெயரில் ஒலி பெருக்கியில் அதிக சத்தம் எழுப்பப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. வீட்டுமனை என்ற பெயரில் வாங்கப்பட்ட இடத்தில் பிரார்த்தனை கூடம் அமைக்க நகராட்சியில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தடையின்மை சான்று வழங்கக்கக்கூடாது. அவ்வாறு அனுமதித்தால் பா.ஜனதா கட்சி சார்பில் பொதுமக்களை திரட்டி அறவழியில் போராட்டம் நடத்தப்படும்' என்று கூறியுள்ளனர்.