ஏழை மக்களை பாதிக்கும் பால் விலை குறைக்கப்படுமா?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஏழை மக்களை பாதிக்கும் ஆவின் பால் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2022-11-06 17:46 GMT

ஏழை மக்களை பாதிக்கும் ஆவின் பால் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வெண்மை புரட்சி

மனிதனின் அன்றாட சத்து தேவையை பூர்த்தி செய்வதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஒட்டுமொத்த உலக பால் உற்பத்தியில் இந்தியா 21 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. கடந்த 1950-60-ம் ஆண்டு காலகட்டங்களில் இந்தியாவில் இருந்த நிலை வேறு. மக்களுடைய அன்றாட பால் தேவையைக்கூட பூர்த்தி செய்யமுடியாத சூழல் அப்போது இருந்தது. அதன்பின்னர் வெண்மை புரட்சி நிகழ்த்தப்பட்டு, பால் உற்பத்தியில் தன்னிறைவு நிலையை நாம் எட்டியிருக்கிறோம்.

விலை உயர்வு

இந்தியா கடந்த ஆண்டு மட்டும் 21 கோடி டன் பால் உற்பத்தி செய்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அரசு நிறுவனமான ஆவின் பாலையும், தயிர், மோர் உள்பட பால் சார்ந்த பொருட்களையும் விற்பனை செய்துவருகிறது. முதல்-அமைச்சராக பதவி ஏற்ற முதல் நாளிலேயே ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்பட 5 முக்கிய கோப்புகளில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இது, கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்த மக்களின் வயிற்றில் பாலை வார்த்தது.

இந்தநிலையில், ஆவின் நிறுவனம் 'பிரீமியம்' (ஆரஞ்சு) பாலை ஒரு லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆகவும் (ரூ.12 உயர்வு), 'டீ மேட்' (சிவப்பு) பாலை ஒரு லிட்டர் ரூ.60-ல் இருந்து ரூ.76 ஆகவும் (ரூ.16 உயர்வு), 'கோல்ட்' (பிரவுன்) பாலை ஒரு லிட்டர் ரூ.47-ல் இருந்து ரூ.56 ஆகவும் (ரூ.9 உயர்வு) உயர்த்தியிருக்கிறது. பால் அட்டை வைத்திருப்பவர்கள் ஆரஞ்சு ரக பாலை, ஒரு லிட்டர் ரூ.46-க்கு பெற்றுக்கொள்ளலாம். அதே சமயத்தில் நீலம் மற்றும் பச்சைநிற பால் பாக்கெட் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

பொதுமக்கள் கருத்து

ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள், டீக்கடைக்காரர்கள், பால் முகவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பால் விலை உயர்வு டீ, காபி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதா? என்பது குறித்து டீக்கடைக்காரர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

டீக்கடை உரிமையாளர் நெடுமாறன், திண்டுக்கல்:- ஆவின் நிறுவனம் 'பிரீமியம்' (ஆரஞ்சு) பால் விலையை லிட்டருக்கு ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆக உயர்த்தியுள்ளது. இதனால் கூடுதலாக ரூ.12 செலுத்தி பால் வாங்க வேண்டிய நிலை உள்ளது. பால் விலை உயர்ந்து விட்டதே என எங்களால் டீ, காபியின் விலையை உயர்த்த முடியாது. ஏனென்றால் அப்படி விலையை உயர்த்தினால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால் தற்போது வரை டீ, காபி விலையை ஏற்றாமல் உள்ளோம். ஆனால் விலையேற்றத்தால் எங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவிக்கிறோம். அரசு இதில் தலையிட்டு ஆவின் பால் விலையேற்றத்தை திரும்ப பெற வேண்டும்.

பால் விலை உயர்வு பேரிடி

திண்டுக்கல்லை சேர்ந்த குடும்ப தலைவி ராஜேஸ்வரி:- வீட்டு விசேஷ நிகழ்ச்சிகள் மற்றும் 5 பேருக்கு மேல் கூட்டு குடும்பமாக வசிப்பவர்கள் தங்கள் வீடுகளில் ஆவின் நிறுவனத்தின் பிரீமியம் (ஆரஞ்சு) பாலையே பெரும்பாலும் வாங்கி பயன்படுத்துவார்கள். தற்போது அதன் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டதால் ஒரு லிட்டர் பால் வாங்க வேண்டியவர்கள் ½ லிட்டர் பாலை வாங்கி அதிக அளவில் தண்ணீரை அதில் ஊற்றி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் பொதுமக்களிடம் அத்தியாவசிய தேவையான பாலை கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். எனவே ஆவின் பால் விலையை குறைக்க வேண்டும்.

பழனியை சேர்ந்த குடும்ப தலைவி விஜயலட்சுமி:- ஆவின் நிறுவனம் நீலம் மற்றும் பச்சைநிற பால் பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தவில்லை என்றாலும் கடைகளில் அந்த பால்பாக்கெட்டுகள் போதுமான அளவு கிடைப்பதில்லை. இதனால் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளையே வாங்கும் நிலை உள்ளது. இதனால் கூடுதலாக லிட்டருக்கு ரூ.12 செலுத்த வேண்டி உள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினரை வெகுவாக பாதிக்கும். மாதாந்திர பட்ஜெட்டில் இந்த விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். கியாஸ், பெட்ரோல் விலை உயர்வு அவர்களை மிரட்டிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பால் விலையும் உயர்த்தப்பட்டது நடுத்தர வர்க்கத்தினருக்கு பேரிடி தான். எனவே ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு பால் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைக்க வேண்டும்

செந்துறையை சேர்ந்த விவசாயி தனபாக்கியம்:- ஆவின் நிறுவனம் பால் விற்பனை விலையை உயர்த்தியுள்ளது. ஆனால் கொள்முதல் விலை உயர்த்தவில்லை. மாடுகளுக்கான தீவன செலவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே கொள்முதல் விலையையும் அதிகரிக்க வேண்டும். அப்போது தான் பால் உற்பத்தியில் ஈடுபடும் எங்களை போன்ற விவசாயிகளுக்கு கட்டுப்படியான வருமானம் கிடைக்கும். மேலும் பொதுமக்களை பாதிக்காத வகையில் ஆவின் பாலுக்கான விலையேற்றம் இருக்க வேண்டும். நீலம் மற்றும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளுக்கான விலை தற்போது உயர்த்தப்படவில்லை என்றாலும் பிற்காலத்தில் உயர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது என்பதையே தற்போதைய விலையேற்றம் காட்டுகிறது. மேலும் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டது ஏழை மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கும். எனவே பால் விலையை சற்று குறைக்க வேண்டும்.

செந்துறையை சேர்ந்த பால் முகவர் சுசிலா:- ஆவின் நிறுவனம் ஆரஞ்சு, சிவப்பு மற்றும் பிரவுன் நிற பால் பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் டீக்கடைக்காரர்கள், பால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை இந்த விலையேற்றம் கடுமையாக பாதிக்கும். எனவே ஆவின் பால் விலையை குறைக்க வேண்டும். அதேநேரம் கால்நடைகளுக்கான தீவன செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரும்படி விவசாயிகள் எங்களிடம் கோரிக்கை வைக்கின்றனர். அவர்களின் கோரிக்கையை அரசு கவனத்தில் கொண்டு கொள்முதல் விலையை ஏற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்