நுகர்வோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்

நுகர்வோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2022-06-05 23:14 GMT

சென்னை,

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது. அடுத்த சில மாதங்களிலேயே, அரை லிட்டர் தயிர் விலை 27 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும், ஒரு லிட்டர் சாதாரண நெய் விலை 515 ரூபாயிலிருந்து 535 ரூபாயாகவும், 200 கிராம் பாதாம் பவுடர் விலை 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டன.

ஐஸ்க்ரீம் வகைகளின் விலையும் 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இதனைக் கண்டித்து நான் அறிக்கை விடுத்ததோடு, உயர்த்தப்பட்ட விலையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தேன். இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஆவின் பால் முன்பைவிட குறைந்த அளவிலேயே ஆவின் பூத்துகளுக்கு வினியோகிக்கப்படுவதாகவும், காலை 8 மணிக்கு மேல் சென்றால் பால் இல்லை என்ற சூழ்நிலை நிலவுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகரிக்க வேண்டும்

இது மட்டுமல்லாமல், 100 கிராம், 200 கிராம் அளவிலான நெய் தற்போது ஆவின் பூத்துகளில் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. பால் நுகர்வோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

எனவே, முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, பால் வகைகள் அனைத்தையும் தாராளமாக வினியோகம் செய்யவும், சிறிய அளவிலான பால் உப பொருட்கள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்