அரசு நிர்ணயித்த விலைக்கு கொள்முதல் செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட பால் உற்பத்தியாளர்கள் முடிவு
அரசு நிர்ணயித்த விலைக்கு கொள்முதல் செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட பால் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, காடூர் பால் உற்பத்தியாளர்கள் சார்பில் பால்வளத்துறை (ஆவின்) துணை பதிவாளர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் அரசு உத்தரவின்பேரில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பால் ரூ.33-க்கு கடந்த நவம்பர் மாதம் முதல் கொள்முதல் செய்து வருகிறது. ஆனால் காடூர் பால் உற்பத்தியாளர்களிடம் மட்டும் ஒரு லிட்டர் பால் ரூ.32.50-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு காடூர் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பால் ரூ.33-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் நிலுவைத்தொகையை இந்த மாதத்திற்கான பால் தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும். இல்லையென்றால் பால் உற்பத்தியாளர்கள் சேர்ந்து காடூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்று கூறப்பட்டிருந்தது.