மகா மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
மகா மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 14-ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று மகா மாரியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை 11.45 மணியளவில் வெற்றி விநாயகர் கோவிலில் இருந்து உடுக்கை, தாரை தப்பட்டை முழங்க தங்களது வேண்டுதல் நிறைவேற பால்குடத்தை தலையில் சுமந்து கொண்டு புறப்பட்ட பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று, கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து, அம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு மேல் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 10 மணிக்கு மேல் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து காளை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.
இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு மேல் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மேல் பம்பை, மேளம் முழங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தீ மிதித்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 3 மணிக்கு மேல் நடக்கிறது. இரவில் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மதியம் 3 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு விழா, அம்மனுக்கு காப்பு அவிழ்த்தலுடன் தீ மிதி திருவிழா நிறைவு பெறுகிறது.