பரமக்குடி,
பரமக்குடி முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வந்தது. இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் திருவிழா நேற்று நடந்தது. அதையொட்டி ஆயிர வைசிய இளைஞர் சங்கம், ஆயிர வைசிய சமூக நலச் சங்கம், ஆயிரம் வைசிய மறுமலர்ச்சி பேரவை, விஸ்வகர்மா ஆச்சாரிகள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஏராளமான ஆண்களும், பெண்களும் நேர்த்திக் கடனாக பால் குடங்கள் எடுத்து ஊர்வலமாக வந்தனர். வைகை ஆற்றில் இருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்ட பால்குட ஊர்வலமானது பெரிய கடை பஜார், பெருமாள் கோவில் தெரு உள்பட முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தது. பின்னர் முத்தாலம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமிகள் வேடம் அணிந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.