புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-22 18:45 GMT

புதிய குடும்ப அட்டை

வெளிமாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில், வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு eShram என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரால் மேற்கண்ட மனுக்களின் மீது விசாரணை செய்து, நிரந்தரமாக தமிழ்நாட்டில் தங்கியுள்ளவர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்.

வட்ட வழங்கல் அலுவலகத்தில்

தமிழ்நாட்டில் தற்காலிகமாகவோ அல்லது குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்து அவர்களது சொந்த மாநிலத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் eShram மூலம் விண்ணப்பிக்கலாம்.

மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். இந்த மனுவினை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்து, புதிய குடும்ப அட்டை பெற்றவுடன் தமிழ்நாட்டில் "ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின்" கீழ் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற்று பயன் பெறலாம்.

எனவே, வெளிமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்து கடலூர் மாவட்டத்தில் வசித்து வரும் குடும்ப அட்டை இல்லாத தொழிலாளர்கள் புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்து பயன் பெறலாம். மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்