கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலயங்களில் இன்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-12-23 18:56 GMT

நாகர்கோவில்,

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடக்கிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கடந்த ஒரு மாதமாக களை கட்டியது. மாவட்டத்தில் உள்ள தேவாலயங்கள் வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கின்றன.

ஆலயங்கள், வீடுகளில் கண்களை கவரும் வகையில் பல வண்ண ஸ்டார்கள் தொங்க விடப்பட்டுள்ளன. வீதியெங்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து பாடல் பாடும் நிகழ்ச்சிகள், கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கிறிஸ்துமஸ் குடில்கள்

குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் இயேசு கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் வகையில் பிரமாண்டமான குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை உள்பட மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் புத்தாடைகள், நகைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பேக்கரிகளில் பலவிதமான கேக் மற்றும் இனிப்பு வகைகளின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

நள்ளிரவு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடக்கிறது. நாகர்கோவில், கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் இன்று இரவு 11.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் ஆயர் நசரேன் சூசை பங்கேற்கிறார்.

இதேபோல் குழித்துறை மறை மாவட்டத்தில் திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயம், மார்த்தாண்டம் மறைமாவட்டத்தில் கிறிஸ்துராஜபுரம் கிறிஸ்தரசர் பேராலயம் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் இன்று இரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடக்கிறது. சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறும்.

பாதுகாப்பு பணியில் 1,200 போலீசார்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், முக்கிய சந்திப்புகள், கடை வீதிகளில் ரோந்து சென்றும், மாறுவேடத்தில் சென்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர பகுதிகளை கண்காணிக்கும் வகையில் சிறப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்