முகூர்த்த நாட்களில் மண்டபம் கிடைக்காமல் திண்டாட்டம்கல்யாண செலவுகளால் கதி கலங்கும் நடுத்தர மக்கள்விலைவாசியால் விழிபிதுங்கும் நிலை மாறுமா?

முகூர்த்த நாட்களில் மண்டபம் கிடைக்காமல் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் கல்யாண செலவுகளால் நடுத்தர மக்கள் கதிகலங்கி வருகிறார்கள்.

Update: 2023-04-08 18:45 GMT

வீட்டை கட்டிப்பார்...கல்யாணம் பண்ணிப்பார் என்பது பழமொழி. ஆம்...வசதி படைத்தவர்களுக்கு வரன் தேடுவதும் எளிது...வகை, வகையாய், தொகையை பார்க்காமல் செலவழித்து கல்யாணம் என்கிற வைபவத்தை நடத்துவதும் எளிது.. ஆனால் நடுத்தர மக்களின் நிலை தான் இன்றைய கால கட்டத்தில் தவிக்கும் நிலை என்கிறார்கள்.

விழி பிதுங்க வைக்கிறது

ஆம்.... நாள் பார்த்து....நட்சத்திரம் பார்த்து.... நாலுபேரு வாழ்த்தொலியோடு..நடத்தி பார்க்க வேண்டிய அந்த சுபகாரியம்.. நடத்தி முடிக்கும் முன் நடுத்தர குடும்பத்தினரை நடுத்தெருவுக்கு கொண்டு வராத குறையாகவே உள்ளது.

ஆகவே விலைவாசிகள் வேறு தாறுமாறாக எகிறிக் கிடக்கும் இன்றைய காலகட்டத்தில்... சிக்கனமாக ஒரு கல்யாணத்தை நடத்தி முடிக்க முடியுமா?' என்கிற கவலைதான் நடுத்தர மக்களை ஆட்டிப் படைக்கிறது. வாட்டி வதைக்கிறது. வழி தெரியாமல் விழி பிதுங்க வைத்து விடுகிறது. இந்த நிலை மாறுமா? என்பதே ஏக்க நிலை.

தேவையற்ற செலவுகள்

திருமணத்தை பொறுத்தவரை நிறைய தேவையற்ற செலவுகள் இருக்கத்தான் செய்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு நம்முடைய பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி நாம் தான் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்றால் திருமண செலவில் பெரும் பங்கு வகிப்பது மண்டபம் மற்றும் சாப்பாடு ஆகிய இரண்டும் புரட்டி போட்டு விடுகிறது. வசதிக்கு தகுந்தமாதிரி திருமண மண்டபங்களை தேர்வு செய்தால் அந்த செலவை குறைக்க முடியும். அதற்காக ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் சிறிய ஹால்களில் திருமணத்தை நடத்திக்கொள்ளலாம் என்றாலும், அதன் வாடகையும் முகூர்த்த காலங்களில் முட்டி மோத வைத்து விடுகிறது. மனதுக்கு பிடித்த மண்டபங்களை பிடிக்க திண்டாட்டமாகி விடுகிறது. இதற்கு அடுத்ததாக பார்த்தால் சாப்பாடு. இதற்கான செலவை குறைக்கிறேன் என்கிற பெயரில் தரமற்ற உணவை வழங்கிவிட முடியாது. அப்படி நினைத்தால் கல்யாண வீடு...களேபர வீடாகி விடும். பலரது ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விடும். அப்புறம் என்னதான் செய்ய முடியும்..?

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை பொறுத்தவரை பணப்புழக்கம் இருந்தாலும் இந்த திருமண விஷயத்தில், நடுத்தர மக்களை திக்குமுக்காட வைத்து விடுகிறது. கல்யாண செலவுகள் என்றாலே கதிகலங்க வைத்துவிடுகிறது. இதுகுறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்:-

கனவுகளை தகர்க்க வேண்டாம்

விழுப்புரத்தை சேர்ந்த செல்வராஜ்:-

தமிழகத்தில் திருமண காலங்கள் என்கிற ஆனி, ஆவணி, தை, சித்திரை மாதங்களில் திருமண செலவுகளுக்காக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் படும் அவதி கண்கொண்டு காண முடியவில்லை. இந்த செலவுகள் வரதட்சணை செலவுகளை தாண்டி பெரும் சுமையாக உள்ளது. இதில் திருமண மண்டபம், அலங்கார செலவுகள், உணவு வகைகள் என பெரும் தொகை செலவழிக்க வேண்டியுள்ளது. இதை சமாளிக்க உள்ளாட்சி அமைப்புகள், தங்கள் பகுதிகளில் அரசு சார்பாக திருமண மண்டபங்களை கட்டி, மக்களுக்கு குறைந்த வாடகைக்கு விடலாம். ஏழை, எளிய, நடுத்தர மக்களும் திருமண மண்டபத்தில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதை மாற்றி பதிவு அலுவலகங்களில் உற்றார், உறவினர்கள் முன்னிலையில் பதிவுத்திருமணம் செய்து பிறகு தங்கள் இல்லங்களிலேயே மணமக்கள் வரவேற்பை நடத்தலாம். இதன் மூலம் செலவுகளும் குறையும், மணமக்கள் வீட்டாரின் அலைச்சலும் குறையும். அனைத்து உறவுகளையும் சாதாரணமாக வீட்டு விசேஷத்தில் பார்த்த மனநிறைவும் நமக்கு கிடைக்கும். இதேபோல் கோவில்களில் திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கேயே உள்ள உணவுக்கூடங்களிலோ அல்லது வீட்டிலோ விருந்தோம்பல் நடத்தலாம். திருமணம் என்பது மணமகன், மணமகளுக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்கக்கூடிய முக்கிய நிகழ்வாகும். அதில் அவர்களையோ, அவர்கள் குடும்பத்தாரையோ கடன்காரர்களாக்கி கனவுகளை தகர்க்க வேண்டாம். எனவே மக்கள் சிந்திக்க வேண்டும். அதேபோல் அரசும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

கதிகலங்க வைக்கிறது

திண்டிவனத்தை சேர்ந்த சமூகஆர்வலர் ராஜசேகர்:-

நடுத்தர மக்கள் திருமண நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு முகூர்த்த தேதியை 4, 5 தினங்கள் குறித்துக்கொண்டு திருமண மண்டபத்திற்கு அலைந்து, கிடைக்கும் தேதியில்தான் முகூர்த்தம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிது, புதிதாக திருமண மண்டபங்கள் முளைத்தபோதிலும் குறிப்பிட்ட முகூர்த்த தேதியில் திருமண மண்டபங்கள் கிடைப்பதில்லை. சில திருமண தேதியை மண்டபங்கள்தான் தீர்மானிக்கிறது. நடுத்தர மக்கள், திருமண செலவினங்களை பட்ஜெட் போட்டு செய்தாலும் செலவினங்கள் அதைவிட அதிகமாகி அவர்களை திக்குமுக்காட வைக்கிறது. மேலும் திருமண விழாவை மற்றவர்கள் பெருமைப்படும் அளவுக்கு செய்ய வேண்டும் என கடன் பெற்று கடனாளியாகவும் ஆகிறார்கள். தற்பெருமைக்காக செலவு செய்துவிட்டு பின்பு விழிபிதுங்கியும் நிற்கிறார்கள். தற்போதுள்ள விலைவாசியால் திருமண செலவுகள் என்றாலே நடுத்தர மக்களை கதிகலங்க வைக்கிறது. எது எப்படி இருந்தாலும் திருமண நிகழ்ச்சி செலவினங்களை குறைத்துக்கொள்ள நடுத்தர மக்கள் தயாராக இல்லை.

மண்டபங்கள்தான் திருமண தேதியை...

மேல்மலையனூர் அருகே பெருவளூர் கிராமத்தை சேர்ந்த மண்ணம்மாள்:-

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற நிலை மாறி தற்போது மண்டபங்கள்தான் நிச்சயிக்கப்படுவதாக உள்ளது. காரணம், திருமண மண்டபத்தில் திருமணத்திற்கான நாள் மற்றும் நேரம் கிடைத்த பிறகே நிச்சயதார்த்தம் நடத்தும் அளவுக்கு இன்று மாறிவிட்டது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். முன்பெல்லாம் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிய வீடுகளிலோ அல்லது வாகனம் வராத சாலைகளிலோ பந்தல் அமைத்து திருமணம் நடத்தினர். ஆனால் இன்று மண்டபத்தில் நடத்தினால்தான் கவுரவம் என நினைக்கத்தொடங்கி விட்டனர். சிலர் கோவில்களில் திருமணம் நடத்தினாலும் மணமக்கள் வரவேற்பு என்று ஒரு நிகழ்ச்சியை திருமண மண்டபங்களில்தான் வைக்கின்றனர். இது பணப்புழக்கம் இல்லாதவர்களை நிச்சயம் பாதிக்கக்கூடும். மேலும் பெண் வீட்டாருக்கு பெண் பார்க்கும் சடங்கிலிருந்து திருமணம் நடக்கும் வரை ஆகும் செலவுக்கு அளவே இல்லை. இதனால் பெண் பிள்ளைகள் பெற்றவர்கள், செலவுகளால் திக்குமுக்காடி விடுகின்றனர். மாப்பிள்ளை வீட்டாருக்கும் திருமண செலவுகள் இல்லாமல் இருப்பதில்லை. மொத்தத்தில் இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்றாலே இருவீட்டாரையும் செலவுகள் கதிகலங்க வைத்துவிடுகிறது.

கோவில்களில் திருமணம் செய்வது நல்லது

செஞ்சி அருகே பெருங்காப்பூரை சேர்ந்த பிரபு:-

முகூர்த்த நாட்களில் மண்டபங்கள் பல இருந்தாலும் இப்போதெல்லாம் கோவில்களில்தான் திருமணம் அதிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு பகுதியில் 5 அல்லது 8 திருமண மண்டபங்கள் இருக்கும். ஆனால் தற்போது சாதாரணமாக 5 திருமண மண்டபம் இருக்கக்கூடிய இடங்களில் 30-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அனைத்து திருமண மண்டபங்களும் முழுவதுமாக அனைத்து முகூர்த்த நாட்களிலும் பதிவு செய்து விடுகிறார்கள். கிராமப்புற பகுதியில் இருக்கக்கூடிய விவசாயிகள், பெரும்பாலும் கோவில்களில் திருமணம் செய்துகொண்டு வீட்டிற்கு செல்கிறார்கள். இருந்தாலும் திருமண செலவு என்று சொன்னாலே இருக்கப்பட்டவர்கள்கூட கடன் வாங்கித்தான் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் கிராமப்புறங்களை பொறுத்தவரை கோவிலிலேயே திருமணம் செய்துகொண்டு வரவேற்பை வீட்டோட முடித்துக்கொள்வது இப்போது பேஷனாக மாறியுள்ளது.

கவுரவத்தின் வெளிப்பாடு

தியாகதுருகத்தை சேர்ந்த பாலாஜி:-

வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை செய்து பார் என்று பழமொழி சொல்வார்கள். அதுபோல வீட்டை கட்டுவதற்கும், திருமணத்தை செய்வதற்கும் திட்டமிட்டதை விட கூடுதலாகவே செலவாகும் என கூறுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் என்பது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் ஆகியோர்களை அழைத்து கிராமங்களில் உள்ள வீடு மற்றும் கோவில்களில் எளிமையாக செய்து வந்தனர். தற்போது காலத்தின் மாற்றம் கிராமத்தில் இருப்பவர்கள் கூட நகர்ப்புறங்களில் உள்ள திருமண மண்டபங்களில் திருமணங்களை செய்து வருகின்றனர். இதனால் குறிப்பாக முகூர்த்த நாட்களில் மண்டபங்கள் கிடைப்பதில்லை. ஒரு சிலர் திருமணம் முடிவு செய்தவுடன் முதல் வேலையாக மண்டபத்திற்கு அட்வான்ஸ் செய்கின்றனர். இவ்வாறு தற்போது திருமணம் என்பது கவுரவத்தின் வெளிப்பாடாகவே மாறியுள்ளது. இவ்வாறு திருமண மண்டபங்களின் வாடகை, நகை, துணிகள், மளிகை பொருட்கள், சமையல்காரர்கள், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளால் நடுத்தர குடும்பத்தினர் விழி பிதுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வட்டிக்கு கடன்வாங்குகிறார்கள்

கள்ளக்குறிச்சியை சேர்ந்த செல்வராஜ்:-

தற்போது திருமண மண்டபத்தில் திருமணம் நடத்துவதை பலரும் ஒரு பெருமையாக கருதுகின்றனர் .ஆனால் ஒரே தேதியில் பல திருமண தேதி அதிகமாக இருப்பதால் திருமண மண்டபம் கிடைக்காமல் திருமண தேதியை மாற்றி வைக்கும் சூழ்நிலை இருந்து வருகின்றது. இது ஒரு புறம் இருக்க பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்கள், ஜவுளிகள் மற்றும் மளிகை பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் ஒரு திருமணம் நடத்த நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள், இதனால் பலர் வட்டிக்கு கடன் வாங்கி திருமணம் நடத்துகிறார்கள்.அந்த வட்டியை கட்ட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை செய்து பார் என்பார்கள் அந்தப் பழமொழியை தற்போது நிஜத்தில் பார்க்க முடிகிறது என கூறினார்.கல்யாண செலவுகளால் கதி கலங்கும் நடுத்தர மக்கள்

Tags:    

மேலும் செய்திகள்