நுண்ணீர் பாசன திட்டம் மூலம் விவசாயிகள் பயன் பெறலாம்- தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்

நுண்ணீர் பாசன திட்டம் மூலம் விவசாயிகள் பயன் பெறலாம், என்று தென்காசி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-06 14:45 GMT

நுண்ணீர் பாசன திட்டம் மூலம் விவசாயிகள் பயன் பெறலாம், என்று தென்காசி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நுண்ணீர் பாசனம்

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நுண்ணீர் பாசனம் என்பது ஒவ்வொரு துளி பாசன நீரையும் சிக்கனமாகவும் திறம்படவும் பயன்படுத்தும் ஒரு சீரிய தொழில்நுட்ப முறையாகும். குறைந்த நீரைக்கொண்டு அதிக பரப்பில் பயிர் உற்பத்தி செய்ய வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அதற்கு பாரத பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் வழிவகை செய்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் தண்ணீர் பயன்பாட்டு திறன் 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை அதிகரிக்கிறது. மகசூல் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இத்தொழில் நுட்பம்மூலம் உரங்களையும் பாசன நீர் வழியாக செடியின் வேர் பகுதிக்கு நேரடியாக செலுத்துவதால் உரப் பயன்பாடு 40 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இதனால் பாசனநீர் சிக்கனமாக பயன்படுவதோடு உரங்களும் வீணாகாமல் தேவைக்கு ஏற்றார்போல் பயன்படுத்தப்படுகிறது.

பாசன அமைப்புகள்

இந்த திட்டத்தில் சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழை தூவான் பாசனம் போன்ற வெவ்வேறு வகையான பாசன அமைப்புகள் உள்ளன. இவ்வாறு அனைத்து அமைப்புகளுக்கும் ஒரே மாதிரியான மானிய முறையே பின்பற்றப்படுகிறது.

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது. இது போன்று 75 சதவீத மானியத்தில் பயன்பெறும் இதர விவசாயிகள் மீதி பங்கு தொகையை வங்கி வரைவோலையாக தமிழ்நாடு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு நீர் பாசன நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும்.

பயன் பெறலாம்

மேற்கண்ட திட்ட இனங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் பட்டா நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2, நில வரைபடம் மற்றும் அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

இந்த ஆண்டு தென்காசி மாவட்டத்திற்கு 2000 ஹெக்டேர் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது. தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டோ அல்லது வலைத்தளத்தின் மூலமாக நேரடியாக பதிவு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்