எம்.ஜி.ஆர். சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தினர்
திருப்பத்தூர் அருகே ஜடையனூர் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் உடைத்ததால் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு
திருப்பத்தூர் தாலுகா ஜடையனூர் கிராமத்தில் கூட்ரோடு பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலை வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் எம்.ஜி.ஆர். சிலையின் கையை உடைத்துள்ளனர். இதை கண்டு அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். இத்தகவல் கிராமம் முழுவதும் பரவியது. உடனடியாக அப்பகுதி அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டனர்.
அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் யுவராஜ் தலைமையில், எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி அ.தி.மு.க.வினர் மற்றும் ஊர் பொதுமக்கள் திருப்பத்தூர் வழியாக செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
போலீஸ் நிலையம் முற்றுகை
அதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த வாணியம்பாடி தொகுதி செந்தில்குமார் எம்.எல்.ஏ., எம்.ஜி.ஆர். சிலையை பார்வையிட்டு அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பேரில் அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் ஒன்றிய செயலாளர் சி.செல்வம் தலைமையில் குரிசிலாப்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷிடம் புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட அவர் ஓரிரு நாட்களில் எம்.ஜி.ஆர். சிலையை உடைத்த மர்ம நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.