மேட்டூர் அணையின் நீர்மட்டம் 9 நாட்களில் 5 அடி குறைந்தது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 9 நாட்களில் 5 அடி குறைந்தது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 120 அடியை எட்டியதுடன், கடந்த ஆண்டில் 3-வது முறையாக நிரம்பியது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. அதே நேரத்தில் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு, அணைக்கு வரும் நீர்வரத்தை விட அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. அதாவது 22 நாட்களுக்கு பிறகு கடந்த 30-ந் தேதி அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து 119 அடியாக குறைந்தது. நேற்று 8-ந் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 115.45 அடியாக குறைந்துள்ளது. அதாவது 9 நாட்களில் அணையின் நீர்மட்டம் 5 அடி குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். நேற்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 17 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.