நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணை 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைந்ததால் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நேற்று காலை நிறுத்தப்பட்டது.

Update: 2022-09-19 21:15 GMT

மேட்டூர், 

மேட்டூர் அணை

மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. அன்று முதல் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்பட்டு வந்தது.

அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அணையை ஒட்டி அமைந்துள்ள நீர்மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வரை வெளியேற்றப்படும். அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரிக்கும் நிலையில் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது வழக்கம்.

இதன் அடிப்படையில் கடந்த மாதம் 17-ந் தேதி காலையில் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடிக்கு கீழ் குறைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது அன்றுடன் நிறுத்தப்பட்டது.

16 கண் மதகுகள்

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதன் அடிப்படையில் கடந்த மாதம் 25-ந் தேதி இரவு 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது.

நேற்று முன்தினம் வரை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி வீதம் காணப்பட்டதால் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் கடந்த 25 நாட்களுக்கு பிறகு மீண்டும் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நேற்று காலையுடன் நிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீரானது நீர்மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்படுகிறது. மேலும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றும் 120 அடியாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்