மேட்டூர் அணை நாளை திறக்கப்பட உள்ளதையொட்டி முக்கொம்பு மேலணை பராமரிப்பு பணி
மேட்டூர் அணை நாளை திறக்கப்பட உள்ளதையொட்டி முக்கொம்பு மேலணை பராமரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேட்டூர் அணை நாளை திறக்கப்பட உள்ளதையொட்டி முக்கொம்பு மேலணை பராமரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையிலிருந்து நாளை (திங்கட்கிழமை) டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டங்கள் வழியாக திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் வந்தடைந்து அங்கிருந்து பெருகமணி திருப்பராய்த்துறை வழியாக முக்கொம்பு மேலணைக்கு வரும்.
பின்னர் மேலணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு திருச்சி மாநகர் வழியாக கல்லணை நோக்கி செல்லும். இதையொட்டி. முக்கொம்பு மேலணையில் ஏற்றி இறக்கக்கூடிய மதகுகளை பராமரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சீரமைப்பு
மேலணையில் உள்ள காவிரி பாலத்திற்கு வர்ணம் பூசப்படுகிறது. தண்ணீரை தேக்கி வைக்கும் மதகின் பலகைகளையும் தொழிலாளர்கள் சீரமைத்து வருகின்றனர். நேற்று காலையில் மதகுகளை ஏற்றி இறக்கக்கூடிய ராட்சத சங்கிலிக்கு கிரீஸ் போடப்பட்டது. இந்த பணியில் முக்கொம்பு உதவி பொறியாளர் ராஜா, பாசன ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.