மேட்டுப்பாளையம்-நெல்லை வாராந்திர சிறப்பு ரெயிலை நீட்டிக்க வேண்டும்
வருகிற 25-ந் தேதியுடன் சேவை முடிவதால், மேட்டுப்பாளை யம்- நெல்லை வாராந்திர சிறப்பு ரெயிலை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை
வருகிற 25-ந் தேதியுடன் சேவை முடிவதால், மேட்டுப்பாளை யம்- நெல்லை வாராந்திர சிறப்பு ரெயிலை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வாராந்திர சிறப்பு ரெயில்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரெயில் நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் (எண்:06030) இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடைகிறது.
இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து திங்கட்கிழமை தோறும் (எண்:06029) இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லையை சென்றடையும். இந்த ரெயில் சேவையானது கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த ரெயில் சேவை நெல்லையில் இருந்து வருகிற 24-ந் தேதி புறப்பட்டு 25-ந் தேதி மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. மறுமார்க்கமாக 25-ந் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு செல்கிறது.
இதன்படி வருகிற 25-ந் தேதியுடன் இந்த சிறப்பு ரெயில் சேவை முடிகிறது. இதுவரை இந்த ரெயிலை நீட்டிப்பது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனால் அந்த ரெயிலை தொடர்ந்து இயக்கி சேவையை நீட்டிக்க வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நீட்டிக்க வேண்டும்
இது குறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். அவர்கள் பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக மேட்டுப்பாளையம்-நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் சேவை மிகவும் வசதியாக இருந்தது.
இந்த ரெயில் சேவை வருகிற 25-ந்தேதி வரை இயக்கப்படும் என்று ஏற்கனவே ரெயில்வே அறிவித்து இருந்தது. ஒவ்வொரு முறையும் இந்த ரெயில் சேவையை ரெயில்வே நிர்வாகம் நீட்டித்து வருகிறது. அதன்படி இந்த சிறப்பு ரெயிலை நீட்டிக்க வேண்டும்.
விடுமுறையில் செல்ல வசதி
அத்துடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை இருந்த நடைமுறை போன்று நெல்லையில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டு வெள்ளிக்கிழமை மேட்டுப்பாளையம் வந்து, வெள்ளிக் கிழமையன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு நெல்லை செல்லும் வகையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை சிறப்பு ரெயில் புறப்பட்டால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் சொந்த ஊர் செல்ல வசதியாக இருக்கும். இதன்மூலம் ரெயில்வேக்கும் அதிக வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.