தென்னையில் பரவி வரும் புதுவகை பூஞ்சான நோயை தடுக்கும் வழிமுறைகள்
தென்னையில் பரவி வரும் புதுவகை பூஞ்சான நோயை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டை:
தென்னையில் பரவி வரும் புதுவகை பூஞ்சான நோயை தடுக்கும் வழிமுறைகள் குறித்து பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவகையான பூஞ்சான நோய்
தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னை சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது தென்னை மரங்களில் புது வகையான பூஞ்சான நோய் பரவி வருகிறது. இந்த நோயை முற்றிலும் ஒழிக்க விவசாயிகள் ஒத்துழைப்புடன் வேளாண் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள முதல்சேரி கிராமத்தில் விவசாயி டேனியல் தென்னந்தோப்பில் 25 தென்னை மரங்களில் புது வகையான காற்றின் மூலம் பரவும் பூஞ்சான நோய் பரவி வருகிறது.
குருத்துகள் பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது
இந்த நோயானது குறைந்த (3-5) வயதுடைய தென்னை மரங்களை எளிதில் தாக்க வல்லது.நோயின் அறிகுறியாக இளங்கன்றுகளின் குருத்துகள் பழுப்பு நிறமாக மாறி பின் காய்ந்து விடும். எனவே விவசாயிகள் தங்கள் தென்னந்தோப்பினை உற்று கவனித்து இந்த நோய்க்கான அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் உடனடியாக வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் தகவல் அளிக்க வேண்டும்.
தென்னை மரங்களை பாதுகாக்க வேண்டும்
தாக்கப்பட்ட மரங்கள் உடனடியாக இறக்க நேரிடுவதால் நோயின் தீவிரத்தை அறிந்து விவசாயிகள் இளம் தென்னை மரங்களில் காண்ட் ஆப் 2 மில்லி லிட்டரை 1 லிட்டர் நீரில் கலந்து ஒவ்வொரு தென்னை மரத்தின் நடுக் குருத்திலும் அரை லிட்டர் வீதம் ஊற்ற வேண்டும் விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே இதை விவசாயிகள் கடைப்பிடித்து புதுவகைபூஞ்சான நோயில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.