உடுமலை அருகே பழைய இரும்புக்கடையில் கிடைத்த உலோகச் சிலை - போலீசார் விசாரணை

உடுமலை அருகே பழைய இரும்புக்கடையில் இருந்த உலோகத்தாலான அம்மன் சிலையை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2022-08-11 09:02 GMT

போடிப்பட்டி,

திருப்பூர் மாவட்டம் உடுமலை எம்ஜிஆர்நகர் பகுதியில் ஷெரிப் என்பவர் பழைய இரும்புக்கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில் இவருடைய பழைய இரும்புக்கடையில் உலோகத்தாலான அம்மன் சிலை ஓன்று இருப்பதாக கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி எழிலரசனுக்குத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவர் தனது உதவியாளர் சித்ராவுடன் அந்த கடைக்கு சென்று பார்த்தபோது அங்கு அம்மன் சிலை இருப்பது உறுதியானது. இதனையடுத்து உடுமலை தாசில்தாருக்கு தகவல் கொடுத்தார். அவருடைய அறிவுரையின்படி எழிலரசன் உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனடியாக ஷெரிப் பழைய இரும்புக்கடைக்குச் சென்ற போலீசார் அங்கிருந்த உலோகத்தாலான அம்மன் சிலையைக் கைப்பற்றினர். அந்த சிலை 37 செமீ உயரமும் 4 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.

பழங்கால சிலை போல தோற்றமளிக்கும் அதன் தொன்மை மற்றும் அது எந்த உலோகத்தினால் செய்யப்பட்டது என்று தெரியவில்லை. மேலும் அந்த சிலை ஏதேனும் கோவிலில் திருடப்பட்டதா? வீட்டில் வைத்து வழிபாடு செய்யப்பட்டதா? பழைய இரும்புக்கடைக்கு வந்தது எப்படி?என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழைய இரும்புக்கடையில் கிடைத்த அம்மன் சிலையால் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்