கடலூரில் டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை ரத்து செய்யக்கோரி வணிகர்கள் ஊர்வலம்

கடலூரில் டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை ரத்து செய்யக்கோரி வணிகர்கள் ஊர்வலமாக சென்று வணிகவரி அலுவலரிடம் மனு அளித்தனர்.

Update: 2022-11-29 18:45 GMT


டெஸ்ட் பர்ச்சேஸ் முறை

வியாபாரிகளுக்கு டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற முறையில் உடனடியாக ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் 6 மாத காலம் அவகாசம் கொடுத்து வியாபாரிகளுக்கு பல்வேறு கூட்டங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் நேற்று டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி வணிக வரித்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த வகையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் தலைமையில் கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ், மாவட்ட செயலாளர் வீரப்பன், பொருளாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலையில் வியாபாரிகள் நேற்று காலை கடலூர் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர்.

ஏற்கனவே வரி விதிப்பு

பின்னர் அவர்கள் ஊர்வலமாக கடலூர் மாவட்ட வணிக வரித்துறை அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த அதிகாரியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், அனைத்து சில்லரை கடைக்காரர்களும் தாங்கள் பொருட்களை வாங்கும் போது, அதற்கான வரி செலுத்தியே பொருட்களை வாங்கி வந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் ஏற்கனவே வரிவிதிப்புக்கு உட்பட்டது. இந்த நிலையில் வணிகவரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சில்லரை விற்பனை கடைகளில் டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரில் பொருட்களை வாங்கி, அதற்கு ரசீது அளிக்கப்படவில்லை என்று கூறி தொடர்ந்து அபராதம் விதித்து வருகின்றனர். அதனால் டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை ரத்து செய்திட வேண்டும். இல்லையெனில் வியாபாரிகளுக்கு 6 மாத காலம் அவகாசம் வழங்கி, அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

அப்போது செயலாளர் சீனிவாசன், பொருளாளர் தேவிமுருகன், மாவட்ட இணைச்செயலாளர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்