கோபி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி ரோட்டில் கற்களை போட்டு ஆண்கள் சாலை மறியல்
கோபி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி ரோட்டில் கற்களை போட்டு ஆண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடத்தூர்
கோபி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி ரோட்டில் கற்களை போட்டு ஆண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிமகன்கள் அட்டகாசம்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொளப்பலூர்-குருமந்தூர் ரோட்டில் உள்ள வெள்ளைபாறைமேடுவில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை அகற்றகோரி கடந்த 2 ஆண்டுகளாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இதுவரை மதுக்கடை அகற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெள்ளைபாறைமேடு அருகே உள்ள மல்லிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்குள் குடிபோதையில் சிலர் புகுந்துள்ளனர். பின்னர் அங்குள்ள குடிநீர் குழாய் உள்ளிட்ட பல பொருட்களை உடைத்து அட்டகாசம் செய்ததாக கூறப்படுகிறது.
கற்களை போட்டு மறியல்
இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள் சிலர் ஆத்திரம் அடைந்து, நேற்று மதியம் மதுக்கடை முன்பு உள்ள ரோட்டில் ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டின் நடுவில் கற்களை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே இதுபற்றி சிறுவலூர் போலீசார், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, 'வெள்ளைப்பாறைமேடுவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
சமூக விரோத செயல்கள்
இதன் காரணமாக இந்த பகுதியை சேர்ந்த மாணவர்களும் படிக்க செல்லாமல் மதுக்கடைக்கு சென்று குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். ஒரு சிலர் குடிபோதையில் சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். எனவே இந்த மதுக்கடையை உடனே அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்றனர்.
அதற்கு டாஸ்மாக் அதிகாரிகள் 'விரைவில் இங்கு செயல்படும் மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட ஆண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் கொளப்பலூர்-குருமந்தூர் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.