லீ குவான் யூவுக்கு மன்னார் குடியில் நினைவு சின்னம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவுக்கு மன்னார் குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என சிங்கப்பூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
சிங்கப்பூர்,
சிங்கப்பூர் தமிழ் அமைப்புகளின் வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
உளங்கவர் ஓவியமே! உற்சாகக்காவியமே தமிழை தமிழே என அழைப்பதில் இருக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை.
தமிழால் இணைந்துள்ள நம்மை மதமோ சாதியோ பிளவுபடுத்த முடியாது. உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வது திராவிட இயக்கம்தான்.
திராவிட இயக்கத்தால் வாழ்ந்த தமிழர்களை காணவே சிங்கப்பூர் வந்துள்ளேன். நான் தமிழ்நாட்டில் இருப்பதாகவே உணர்கிறேன்.
தமிழ் மொழியில் ஏற்படுத்திய சீர்திருத்தத்தை முதன்முதலில் செயல்படுத்தியது சிங்கப்பூர்தான். சிங்கப்பூரை மிகக் குறுகிய காலத்தில் உலகமே வியக்கும் வகையில் முன்னேற்றியவர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ. சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னமும், அவரது பெயரில் நூலகமும் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அடுத்தாண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் அதிகளவில் இடம்பெற வேண்டும் என்றார்.