புலம் பெயர்ந்த தமிழர்களின் உறுப்பினர் சேர்க்கை விரைவில் தொடங்கும்-கருத்தரங்கில் தகவல்

புலம் பெயர்ந்த தமிழர்களின் உறுப்பினர் சேர்க்கை விரைவில் தொடங்கும் என்று கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-09-23 18:45 GMT

புலம் பெயர்ந்த தமிழர்களின் உறுப்பினர் சேர்க்கை விரைவில் தொடங்கும் என்று கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கருத்தரங்கம்

ராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் புலம்பெயர்ந்த மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கருத்தரங்க நிகழ்ச்சி கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலத்துறை ஆணையர் ஜெஸிந்தா லாசரஸ் ஆகியோர் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் ஜெசிந்தா லாசரஸ் பேசியதாவது:-

தமிழகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் கருதி அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையம் அமைக்கப்பட்டு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட புள்ளிவிவரத்தின்படி சுமார் 28 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனை பேணி பாதுகாக்க முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன்காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். மிக விரைவில் உறுப்பினருக்கான சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளது. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தமிழர்களின் விவரம் இன்னும் கிடைக்கவில்லை. தற்போதுள்ள புள்ளிவிவரம் முழுமையானது அல்ல. இதனால் ஆபத்துக் காலங்களில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

விழிப்புணர்வு

எனவே வெளிநாட்டில் வேலைக்கு செல்வதற்கு முன் பதிவு செய்த முகவர்கள் மூலமாக செல்ல போதிய விழிப்புணர்வு நம்மிடையே வேண்டும். மேலும் அரசின் உதவியுடன் அரசாங்கத்திடம் பதிவு செய்து வேலைக்கு செல்ல வேண்டும். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவரும் போலியான வெளிநாட்டு வேலை வாய்ப்பு விளம்பரங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பேசியதாவது:-

வேதனை அளிக்கிறது

புலம்பெயர்ந்த மக்களுக்கு பொருளாதார முன்னேற்றத்திற்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன. பலர் வெளிநாட்டிற்கு சென்றால் போதும் எப்படியும் வேலை பார்த்து விடலாம் என்ற நினைப்பில் தெரியாத நிறுவனங்களின் ஆசை வார்த்தைகளை நம்பி வெளிநாடு சென்று போதிய ஊதியம் இல்லாமலும் தங்கும் இடம் மற்றும் உணவு வசதிகள் சரியாக இல்லாமல் பாதுகாப்பின்றி இருப்பதாக அவர்களின் குடும்பங்கள் மூலம் அறிய வரும்போது மிகுந்த வேதனை அளிக்கிறது. இதை தவிர்த்து சரியான நிறுவனத்தில் சரியான பணிக்கு பாதுகாப்புடன் செல்வதற்கான பாதுகாப்பு மையம் முதல்வரின் உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நலத்துறை துணை ஆணையர் ரமேஷ், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் மரகதநாதன், நேர்முக உதவியாளர் ஷேக் மன்சூர், தாசில்தார் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்