மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் கார் எரிப்பு

குன்னூர் அருகே நள்ளிரவில் மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-08 15:26 GMT

குன்னூர், 

குன்னூர் அருகே நள்ளிரவில் மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் எரிப்பு

குன்னூர் அருகே மேலூர் கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த நாகராஜ் உள்ளார். இவர் மஞ்சகம்பை அருகே டிக்லேன்ட் பகுதியில் வசித்து வருகிறார். அவர் வழக்கமாக அலுவலகம் மற்றும் பிற இடங்களுக்கு சென்று விட்டு வீட்டருகே காரை நிறுத்துவது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜ் தனது வீட்டின் அருகே உள்ள காட்டேஜ் பகுதியில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்று உள்ளார்.

பின்னர் நேற்று காலையில் எழுந்து பார்த்த போது, கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து கொலக்கொம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீயில் எரிந்த காரை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் நாகராஜ் காருக்கு தீ வைத்ததும், தீ மளமளவென எரிந்து கார் முழுவதும் சேதமடைந்ததும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். நள்ளிரவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் காருக்கு தீ வைத்தது தெரியவந்தது. மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் கார் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்