கழிவுநீர் வாகன உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் வாகன உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-04-12 18:12 GMT

காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீர் வாகன உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

விழிப்புணர்வு கூட்டம்

கழிவுநீர் அகற்றும் வாகனங்களைப்பதிவு செய்வது மற்றும் கழிவுகளை முறையாக அகற்றுவது குறித்து காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஷ்வரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகனங்களுக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அதற்கான உரிமம் வழங்கப்பட உள்ளது. இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம் மட்டுமே. உரிமம் பெற்றவர் தவிர வேறு எந்த நபரும் கட்டிடங்களில் இருந்து மனிதக்கழிவுகள் மற்றும் கழிவுநீரை சேகரித்துக்கொண்டு செல்வது விதிகளுக்கு முரணானது. உரிமை பெற்றவரின் வாகனத்தில் மட்டுமே கழிவுநீரை அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும்.

மேலும் உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி, ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்வதுடன், அந்தக்கருவி செயல்படுவதையும், எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவுகளை அனுப்புவதையும் உறுதி செய்யவேண்டும். கழிவுநீர் அகற்றும் நேரம், வழி ஆகியவற்றைப் பின்பற்றி குறிப்பிட்ட இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

அபராதம்-உரிமம் ரத்து

இந்த விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், முதல் முறை குற்றத்திற்கு ரூ.25 ஆயிரமும், 2-வது மற்றும் தொடர் குற்றங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையிலும் அபராதம் விதிக்கப்படுவதோடு உரிமமும் ரத்து செய்யப்படும். எனவே காங்கயம் பகுதிகளில் அகற்றப்படும் கழிவுகளை சென்னிமலை சாலையில் உள்ள நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கழிவு நீரைக்கொட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் எம்.பன்னீர்செல்வம், சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ் மற்றும் காங்கயம் பகுதியைச்சேர்ந்த கழிவுநீர் அகற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள், டிரைவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்