ஒரே இடத்தில் தற்காலிக பஸ்நிலையம் செயல்பட நடவடிக்கை

ஒரே இடத்தில் தற்காலிக பஸ்நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.

Update: 2023-04-06 18:45 GMT

ஒரே இடத்தில் தற்காலிக பஸ்நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.

நகராட்சி கூட்டம்

ராமநாதபுரம் நகராட்சி கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் லெட்சுமணன், என்ஜீனியர் சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ராமநாதபுரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்றத்தில் அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் நேரு, காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு நகராட்சி தலைவர் கார்மேகம் நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:- ஸ்டாலின்:- குப்பை வண்டிகள் பழுதாக உள்ளதால் குப்பை அள்ளும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஆணையாளர்:- குப்பை அகற்றும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. எத்தனை டன் குப்பைகளை அகற்றுகிறார்களோ அதற்குரிய கட்டணம் மட்டுமே வழங்கப்படும். எனவே, பணியில் தொய்வு ஏற்படாது. குப்பை வண்டிகள் பழுது நீக்கப்படும்.

ஒரே இடத்தில் தற்காலிக பஸ் நிலையம்

குமார்:- ராமநாதபுரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தும்போது அருகில் உள்ள ஊராட்சிகளை இணைக்க வேண்டும். தலைவர்:- ராமநாதபுரத்தை சுற்றி 10 கிலோ மீட்டரில் உள்ள அனைத்து ஊராட்சிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி இடங்களை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுள்ளோம். 23-வது வார்டு கவுன்சிலர் இந்துமதி முத்துலட்சுமி தனது கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு செய்தார். ஜகாங்கீர்:- உயர்மின்கோபுர விளக்குகள் எரிவதில்லை. குமார்:- புதிய பஸ்நிலையத்தை புதிதாக கட்டுவதால் தற்காலிகமாக பஸ்நிலையம் இயங்குவதற்கு செய்யப்பட்டுள்ள மாற்று நடவடிக்கை என்ன?

தலைவர்:- பழைய பஸ் நிலையத்திலும், மதுரை ரோடு ஹவுசிங் போர்டு இடத்திலும் தற்காலிகமாக பஸ்நிலையம் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குமார்:- ஒரே இடத்தில் பஸ்நிலையம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 இடங்களுக்கு மாற்றினால் பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, ஒரே இடத்தினை தேர்வு செய்து பஸ்நிலையம் அமைக்க வேண்டும். தலைவர்:- வேறுஇடம் இல்லாததால் 2 இடங்களில் பஸ்நிலையத்தை தற்காலிகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரே இடத்தில் செயல்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

டெண்டர்

குமார்:- ஏற்கனவே தணிக்கை தடை உள்ள நிறுவனத்திற்கு திடக்கழிவு மேலாண்மை பணிக்கான டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் செய்ய உள்ளேன். இதுகுறித்து பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். என்ஜினீயர்:- தொழில்நுட்ப குழு ஒப்புதல் வழங்கியதால் டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆணையாளர்:- கருப்பு பட்டியலில் உள்ள நிறுவனம்தான் டெண்டரில் கலந்துகொள்ள முடியாது. மற்ற நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம். தணிக்கை தடை என்பது நிவர்த்தி செய்யக்கூடியதுதான். விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் டெண்டர் கொடுக்கப்படுகிறது. அப்போது, பா.ஜ.க. கவுன்சிலர்களின் பேச்சுக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்