திருப்பரங்குன்றம் ஒன்றிய குழு கூட்டம்
திருப்பரங்குன்றம் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் வேட்டையன் தலைமை தாங்கினார். ஆணையாளர் ராமமூர்த்தி, ஒன்றிய குழு துணைத் தலைவர் இந்திரா ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கான செலவீனத்திற்கான ஒப்புதல் குறித்து 49 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் 2023-ல் மார்ச் மாதம் 30- ந்தேதி வரை ஒரு ஆண்டிற்கான நிதிநிலை குறித்து ஆணையாளர் ராமமூர்த்தி வாசித்தார். அதில் எஸ்.எப்.சி. மானியம் மற்றும் இதர வரவினம் மூலமாக 8 கோடியே 55 லட்சத்து 8 ஆயிரத்து 250 ரூபாய் இருப்பு இருந்தது. இதில் ரூ.6 கோடியே 30 லட்சத்து 99 ஆயிரத்து 507 செலவீனமாகும். பொது நிதி வைப்புத்தொகை, தேர்தல் வைப்புத்தொகை, 2022-23-ல் பொது நிலை வேலைகளுக்கு என்று ரூ.3 கோடி 51 லட்சத்து 21 ஆயிரத்து 339 தேவை. இதில் ரூ.2 கோடியே 24 லட்சத்து 8 ஆயிரத்து 743 உறுதியளிக்கப்பட்ட செலவீனமாக உள்ளது. ரூ. 1 கோடி 27 லட்சத்து 12 ஆயிரத்து 596 பற்றாக்குறையாக உள்ளது என்றார்.கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான நிலையூர் முருகன் பேசும்போது, 38 ஊராட்சிகளில் ஜல் ஜீவன் திட்டம் மூலம் போடப்பட்ட குடிநீர் குழாய்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றார். மேலும் அவர் கீழக்குயில்குடி சமணர் படுகைக்கு செல்லும் பாதையில் பேவர்பிளாக் சாலை அமைப்பதற்கு தொல்லியியல் துறையிடம் அனுமதி பெறாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆசைதம்பி, தென்பழஞ்சிசுரேஷ், சுமதிசெல்வம், ராஜேந்திரன், சாந்தி கோபாலாச்சாரி உள்பட பலர் பேசினார்கள்.