நாமக்கல்:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வை 300 பள்ளிகளை சேர்ந்த 20,641 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இந்த நிலையில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் எடுத்து செல்லும் வழித்தட அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு மாவட்ட கல்வி அலுவலர் ரவி தலைமை தாங்கி, தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்களுக்கு தேர்வு மையங்களை ஒதுக்கி, அதற்கான நியமன கடிதத்தை வழங்கினார். அப்போது அவர் பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார். கூட்டத்தில் பள்ளி துணை ஆய்வளார் பெரியசாமி, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், மூத்த பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.