தர்மபுரி-மொரப்பூர் ரெயில் பாதைக்கான நிலம் அளவீடு பணியை விரைவாக முடிக்க வேண்டும்-கண்காணிப்பு குழு கூட்டத்தில் செந்தில்குமார் எம்.பி. வலியுறுத்தல்

Update: 2022-12-05 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி-மொரப்பூர் இடையே ரெயில் பாதை அமைப்பதற்கான நிலம் அளவீடு செய்யும் பணியை அதிகாரிகள் விரைவாக முடிக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் செந்தில்குமார் எம்.பி. வலியுறுத்தினார்.

மக்கள் நல திட்டங்கள்

தர்மபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் செந்தில்குமார் எம்.பி. கூட்டத்திற்கு தலைமை தாங்கி, மத்திய, மாநில அரசுகள் சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பொதுமக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களை துறை அலுவலர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

நிலம் அளவீடு பணி

அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதாவது சிரமங்கள் இருந்தால் அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அதற்குரிய தீர்வை கண்டறிந்து மக்கள் நல திட்டங்களை காலதாமதமின்றி விரைவாக நிறைவேற்ற முடியும். தர்மபுரி-மொரப்பூர் இடையே புதிய ரெயில் பாதை அமைப்பதற்கு நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விரைவாக முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராமதாஸ், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் குமார், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, தர்மபுரி நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்