அரசு அலுவலர்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
கிருஷ்ணகிரியில் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டிதலைமையில் நடந்தது.
கிருஷ்ணகிரியில் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டிதலைமையில் நடந்தது.
ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட அரசிதழ் பதிவுப்பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், உதவி கலெக்டர் சதீஷ்குமார் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக அலுவலக கூடுதல் கட்டிடங்கள் கட்ட நில ஒதுக்கீடு செய்யும் பணிகள், மருத்துவக் கல்வித்துறை, அரசு மருத்துவக்கல்லூரியில் புற காவல் நிலையம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மருத்துவமனைக்கு வருபவர்களின் இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்தல், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாக கொடிநாள் நிதி வசூல் செய்யும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆதார் எண் இணைக்கும் பணி
ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சியில் சொத்து வரி நிலுவைத்தொகை வசூல் செய்யும் பணிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அமைப்புசாரா தொழிலாளர்கள் 100 சதவீதம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.