பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் காந்தி ஜெயந்தி கிராமசபை கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் காந்தி ஜெயந்தி கிராமசபை கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி கிராமசபை கூட்டம் நடந்தது.
கவுண்டம்பட்டி, வெங்கடசமுத்திரம்
பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டம்பட்டி ஊராட்சியில் உள்ள தோளனூரில் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார் தலைமையில் காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர் மகாலட்சுமி அரங்கநாதன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் குப்புசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பணி மேற்பார்வையாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் தலைவர் மலர் மாரப்பன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பிரபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாயம் சார்ந்த திட்டங்கள், ஜல்ஜீவன், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. ஊராட்சி செயலர் கோவிந்தராஜூ ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இருளப்பட்டி, பட்டுகோணம்பட்டி
இருளப்பட்டி ஊராட்சியில் உள்ள நாகலூரில் ஊராட்சி மன்ற தலைவர் குமார் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பார்வையாளர் கிருஷ்ணவேணி வரவேற்றார். கூட்டத்தில் பொதுநிதி செலவினம், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஊராட்சி துணைத்தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சேட்டு செய்திருந்தார்.
பட்டுகோணாம்பட்டி ஊராட்சி எலந்தகொட்டபட்டியில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமையிலும், துணைத்தலைவர் சரஸ்வதி மாரியப்பன் முன்னிலையிலும் நடந்தது. கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பணி மேற்பார்வையாளர் முருகன் மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் ராஜசேகரன் செய்திருந்தார்.
19 ஊராட்சிகள்
இதேபோல் அதிகாரப்பட்டி, பொம்மிடி, மஞ்சவாடி, மோளையானூர், பையர்நத்தம், பி.பள்ளிப்பட்டி உள்ளிட்ட 19 ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களை அரூர் உதவி கலெக்டர் விஸ்வநாதன், மாவட்ட ஊராட்சி செயலாளர் மாரிமுத்து ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்குமரன், அருள்மொழிதேவன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.