அதிகாரிகளை கண்டித்து யூனியன் கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர்கள்

அதிகாரிகளை கண்டித்து யூனியன் கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். பேச்சுவார்த்தைக்குபின் கூட்டம் நடந்தது.

Update: 2022-09-05 17:29 GMT

போகலூர்,

அதிகாரிகளை கண்டித்து யூனியன் கூட்டத்தை கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். பேச்சுவார்த்தைக்குபின் கூட்டம் நடந்தது.

வெளிநடப்பு

பரமக்குடி தாலுகா போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் வக்கீல் பூமிநாதன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் செல்லம்மாள் வரவேற்றார்.

அப்போது திடீரென அனைத்து கவுன்சிலர்களும் கூட்ட அறையில் இருந்து எழுந்து அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு எந்தவித மரியாதையும் கொடுப்பதில்லை. எனவே இந்த கூட்டம் நடத்த வேண்டாம் என கூறி அனைவரும் வெளிநடப்பு செய்து கூட்டத்தில் இருந்து வெளியேறினர். உடனே ஆணையாளர் செல்லம்மாள் உள்பட அலுவலர்கள் அவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தலைவர் சத்யா குணசேகரன் அறையில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது. அப்போது துணைத்தலைவர் பூமிநாதன் பேசுகையில், அதிகாரிகள் கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை. எப்போது போனில் தொடர்பு கொண்டாலும் கூட்டத்தில் இருக்கிறோம் என்று சொல்கின்றனர். இப்படி இருந்தால் மக்கள் பணியை நாங்கள் எப்படி செய்வது? என்றார்.

குறைந்த மின்அழுத்தம்

பின்பு தலைவர் சத்யா குணசேகரன் பேசுகையில் அதிகாரிகள் 11 மணிக்கு தான் அலுவலகத்திற்கு வருகிறார்கள். அவ்வாறு வந்தால் என்ன வேலை செய்ய முடியும். அதிகாரிகள் சரியான நேரத்திற்கு வராவிட்டால் அவர்களின் வருகை பதிவேட்டில் ஆப்ஷன்ட் போட்டு மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் அதிகாரிகள் தினமும் எந்த வேலையை பார்க்க செல்கிறீர்கள் என்பதை படம் எடுத்து எனது வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும் என்றார்.

அதற்கு பதில் அளித்து ஆணையாளர் செல்லம்மாள் பேசுகையில், இனிமேல் சரியான நேரத்திற்கு வராத அலுவலர்களுக்கு ஆப் சென்ட் போடுங்கள். அதை நான் மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார். பின்பு ஒன்றிய கவுன்சிலர் ராமசாமி பேசுகையில், அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாரிகள் பயந்து பணியாற்றினார்கள். தி.மு.க. ஆட்சியில் அதிகாரிகளின் ராஜ்ஜியம் ஆகிவிட்டது என்றார். கவுன்சிலர் காளிதாஸ் பேசுகையில், உரத்தூரில் டிரான்ஸ் பார்மர் அமைக்காததால் குறைந்த மின் அழுத்தம் வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மனு

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை. உரத்தூர் - கொடிக் குளம் செல்லும் சாலை 15 ஆண்டுகளாக போடப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். அதை உடனே சீரமைக்க வேண்டும் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்