அனைத்து கிராமங்களிலும் சமத்துவ சுடுகாடு அமைக்க நடவடிக்கை- மாவட்ட ஊராட்சி தலைவர்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சமத்துவ சுடுகாடு அமைத்திட வேண்டும் என மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் கூறினார்.

Update: 2022-07-24 16:31 GMT

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சமத்துவ சுடுகாடு அமைத்திட வேண்டும் என மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் கூறினார்.

மாவட்ட ஊராட்சி கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஊராட்சி சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலியபெருமாள், மாவட்ட ஊராட்சி செயலாளர் லதா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பொன்னியின் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.

சாந்தி: வலங்கைமான் மணக்காலில் மயானத்திற்கு கொட்டகை அமைத்து தர வேண்டும். உத்தமநாதபுரத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.

ஷோபா: பைங்கநாடு பகுதி பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் தொடங்கி பாதியில் நிற்கிறது. எனவே பள்ளி சுற்றுச்சுவர் பணிகளை முடிக்க மாவட்ட ஊராட்சி மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுஜாதா: குறுவை சாகுபடிக்கு தேவையான யூரியாவை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்.

படிப்படியாக நிறைவேற்றப்படும்

மஞ்சுளா: களப்பால் பள்ளி மாணவர்கள் நலன் கருதி பெஞ்சு, டேபிள் வழங்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஊராட்சி தலைவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

துணைத்தலைவர்: மக்களின் தேவைகளை அறிந்து அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. நிதி ஆதாரங்களுக்கு ஏற்ப மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தலைவர்: மயான கொட்டகை, சாலை சீரமைப்பு போன்ற பணிகள் நிதி ஆதராங்களை கொண்டு நிறைவேற்றி தரப்படும். தூர்வாரும் பணிகள் வருகிற ஆண்டு நிறைவேற்றி தரப்படும்.

சமத்துவ சுடுகாடு அமைக்க நடவடிக்கை

பள்ளி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். உரங்கள் தட்டுப்பாடுன்றி கிடைக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. சமத்துவ சுடுகாட்டிற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சமத்துவ சுடுகாடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு 100 கிராமங்களில் சமத்துவ சுடுகாடு அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். 

Tags:    

மேலும் செய்திகள்