மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சியில் போலீசார் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்டளைதாரர்கள் மூலம் விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 5-ம் திருவிழாவான நேற்று முன்தினம் விளாத்திகுளம் காவல் துறையினர் சார்பில் விழா நடைபெற்றது. போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் குடும்பத்துடன் விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரசோலை மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. பின்னர் காவல் துறையினர் சுவாமி எழுந்தருளிய சப்பரத்தை வடம் பிடித்து இழுத்து ஊர்வலமாக வந்தனர். மேலும் பக்தர்களுக்கு காவல்துறை சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.