ஆரோவில்லில் சர்வதேச ஆன்மிக மாநாடு:தியானம் செய்வதால் உணர்வுகள் பண்படுகிறதுகவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
ஆரோவில்லில் சர்வதேச ஆன்மிக மாநாட்டில் தியானம் செய்வதால் உணர்வுகள் பண்படுகிறது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினாா்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில்லில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்கு அன்னையின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி ஆரோவில் பவுண்டேசன் சார்பில் 3 நாட்கள் சர்வதேச ஆன்மிக மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு நேற்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியில் ஆரோவில் செயலாளர் ஜெயந்தி ரவி வரவேற்றார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் ஆரோவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஆரோவில்வாசிகள் கலந்துகொண்டனர்.
விழாவில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 2 லட்சம் மக்கள் தற்கொலை செய்து கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. அதில் இளைஞர்கள் தான் அதிகம். இது மிகவும் அச்சம் தரக்கூடிய ஒன்றாகும். இளைஞர்களுக்கு வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்கொள்ள கற்றுக்கொடுக்க வேண்டும்.
தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தியானம் செய்வதால் மனது அமைதி பெறுகிறது. நம்முடைய உணர்வுகள் பண்படுகிறது. அதிக ஆற்றலோடு, ஆக்கப்பூர்வமாக செயல்பட உதவுகிறது. நினைவாற்றலை, கவனத்திறனை பலப்படுத்துகிறது. இந்த உண்மையை இளைஞர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும்.
இத்தாலியில் நடந்த ஆராய்ச்சியில், தொடர்ந்து தியானம் செய்பவர்களின் நினைவாற்றல், புரிதல் திறன், மூளைத்திறன் மற்றவர்களை விட அதிகமாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். புதுச்சேரிக்கு வேதபுரி என்று பெயர் உண்டு. இது ஆன்மிக பூமி. இங்கு 30 முதல் 40 சித்தர் பீடங்கள் இருக்கின்றன. ஆரோவில் நகரமும் இந்த பகுதியில் தான் இருக்கிறது. இங்கிருந்து, மனித வாழ்க்கைக்கான விழிப்புணர்வு, ஆன்மிக செய்தியை உலகம் முழுவதும் எடுத்துச்செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.