டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து வழங்கக்கூடாது
மருந்துகளை போதை பொருட்களாக பயன்படுத்துவதை தடுக்க டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து வழங்க கூடாது என மருந்தக நிர்வாகிகளிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருந்துகளை போதை பொருட்களாக பயன்படுத்துவதை தடுக்க டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து வழங்க கூடாது என மருந்தக நிர்வாகிகளிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் கூரியர் நிறுவன நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அவர் பேசுகையில் போதை பொருட்கள் கடத்தல், விற்பனை தடுப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மேலும், மருந்தக நிர்வாகிகளிடம் தங்கள் கடைகளுக்கு மருந்துகள் வாங்க வரும் பொதுமக்களிடம் டாக்டர்கள் பரிந்துரை செய்த மருந்து சீட்டு பெற்று அதன் பின்னரே மருந்துகள் வழங்க வேண்டும். சில மருந்துகளை போதைப் பொருளாக பயன்படுத்துகின்றனர். இவை தடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போதைப்பொருளாக
வேலூர் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க ஒவ்வொரு துறை வாரியாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்து அவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. குறிப்பாக மருந்தகங்களில் டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கக் கூடாது. சில மருந்துகளை குறிப்பாக மனநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை போதைப் பொருளாக பயன்படுத்தி வருவதாக புகார் வந்துள்ளது. அதை தடுப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் சிலர் கூரியர் நிறுவனங்கள் மூலம் அனுப்பப்படும் பார்சலில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்துவதாகவும் புகார் வந்துள்ளது. அதை தடுப்பதற்காகவும் கூரியர் நிர்வாக ஊழியர்களை அழைத்து அவர்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை முன் எச்சரிக்கை நடவடிக்கையாகும்.
வாகன சோதனை
போதை பொருள் ஒழிப்பை தடுக்கும் விதமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளில் காவல் மன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் காவல் மன்றம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பிரத்தியேகமாக மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட வாட்ஸ் அப் புகார் எண்ணில் இதுவரை 7 புகார்கள் வரப்பெற்றது. அதில் 6 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட எல்லைகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் வாகன தணிக்கை செய்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள 7 சோதனைச் சாவடிகளில் போலீசார் மூலம் சோதனை செய்யப்படுகிறது.
கண்காணிப்பு கேமராக்கள்
இது தவிர ஊரகப் பகுதி வழியாக சிலர் கடத்துவதை தடுக்க அங்கேயும் மோட்டார்சைக்கிள் மூலம் போலீசார் ரோந்து செல்கின்றனர். போதைப்பொருள் தடுப்பது குறித்து மாவட்ட அளவிலும் கமிட்டி அமைக்கப்பட்டு அதன் மூலமும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலேயே பெரிய அளவிலான அரங்கம் தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.